உயிரிழந்த பிரதீபா காவேரி ஊழியர்களுக்கு ரூ.9-24 லட்சம் இடைக்கால நஷ்டஈடு: ஹைகோர்ட்
சென்னை: நீலம் புயல் சென்னையைத் தாக்கியபோது தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலில் இருந்து குதித்து உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நஷ்டஈடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை நீலம் புயல் தாக்கியபோது சென்னையில் பிரதீபா காவேரி என்னும் கப்பல் தரைதட்டியது. அப்போது உயிர் பிழைப்பதற்காக அந்த கப்பல் ஊழியர்கள் 6 பேர் கடலில் குதித்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் கரை சேர முடியாமல் பரிதாபமாக உயிர் இழந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக்கோரி அவர்களின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க கப்பல் நிர்வாகம் ரூ.30 லட்சம் வைப்புத்தொகை செலுத்த உத்தரவிட்டது. அதன்படி கப்பல் நிர்வாகமும் வைப்புத்தொகையை கட்டியது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பாஸ் வசந்தகுமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர் கூறுகையில்,
உயிர் இழந்த பிரதீபா காவேரி கப்பல் ஊழியர்களின் குடும்பத்தாருக்கு இடைக்கால நஷ்டஈடாக ரூ.9 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை வழங்க வேண்டும். மேலும் கப்பல் நிர்வாகம் செலுத்திய வைப்புத்தொகையை இன்னும் 4 வார காலத்திற்குள் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். கப்பல் நிறுவனம் ரூ. 10 கோடிக்கு வங்கி அசையா சொத்து உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார்.
மேலும் இந்த வழக்கை 3 மாதத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் அரசு மற்றும் காவல் துறைக்கு அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications