உ.பி. நிதாரியில் சிறுமியை சீரழித்து கொன்ற வழக்கு: சுரீந்தர் கோலிக்கு 5-வது மரண தண்டனை

நிதாரியில் பல பெண்களை சீரழித்துக் கொன்றவன் சுரீந்தர் கோலி. இவனுக்கு ஏற்கெனவே 4 வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2005-ம் ஆண்டு 5 வயது சிறுமியை சீரழித்த வழக்கில் 5-வது முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்
2005-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா அருகே நிதாரியில் கோலி வேலைபார்த்து வந்த மொகீந்தர் சிங்கின் வீட்டுக்கு வெளியே 5 வயது சிறுமி காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் மொகீந்தர் சிங் வீட்டுக்கு அருகே அப்பகுதியில் காணாமல் போன சிறுமிகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து மொகீந்தர் சிங் மற்றும் கோலி இருவரும் 2006-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதில் சிறுமிகளையும் பெண்களையும் மொகீந்தர்சிங்கும் கோலியும் சீரழித்துவிட்டு பின்னர் துண்டு துண்டாக வெட்டி கழிவுநீர் குட்டையில் வீசியதையும் ஒப்புக் கொண்டான்.
இந்த வழக்கில்தான் இன்று அவனுக்கு காசியாபாத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருக்கிறது. இது இவனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5-வது மரண தண்டனை.
4 வழக்குகளில் தண்டனை
மொத்தம் 19 வழக்குகள் இருவர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 3 வழக்குகளில் போதுமான சாட்சியம் இல்லை. 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு வழக்கிலும் 2009 செப்டம்பர், 2010 மே மற்றும் டிசம்பரில் ஏற்கெனவே 4 வழக்குகளில் சுரீந்தர் கோலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில் இத்தகைய தீர்ப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
