தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர்கள் வெளிநடப்பு புதிதல்ல!
டெல்லி: தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் இப்படி வெளிநடப்பு செய்வது புதிதல்ல, ஏற்கனவே 28 ஆண்டுகளுக்கு முன்பு 4 முதல்வர்கள் வெளிநடப்பு செய்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
10 நிமிடத்திற்கு மேல் பேச அனுமதி தராமல், பெல் அடித்து அசிங்கப்படுத்தியதால் கோபமடைந்த முதல்வர் ஜெயலலிதா நேற்றைய தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். ஜெயலலிதாவின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் வெளிநடப்பு என்பது புதிதல்ல, ஏற்கனவே 28 வருடங்களுக்கு முன்பு நான்கு முதல்வர்கள் வெளிநடப்பு செய்து முன்னுதாரணமாக இருக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் அரசு டிஸ்மிஸ்
1984-ம் ஆண்டு பரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் மாநில அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது. அப்போது இந்திராகாந்தி பிரதமராக இருந்தார். அவர் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை கூட்டி இருந்தார்.

இந்திரா தலைமையில் அவசரக் கூட்டம்
1984-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி அந்த கூட்டம் நடந்தது. மாநில முதல்வர்கள் பலரும் அதில் கலந்து கொண்டனர்.

என்.டி.ஆர்., ஹெக்டே, ஜோதிபாசு, நிரூபன் வெளிநடப்பு
அப்போது, ஜம்மு காஷ்மீர் அரசை டிஸ்மிஸ் செய்ததற்குக் கண்டனம் தெரிவித்து, கூட்டத்தில் இருந்து ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, திரிபுரா முதல்வர் நிரூபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

இந்திராவை சாடிய என்டிஆர்
வெளிநடப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய என்.டி.ஆர், காங்கிரஸ் அல்லாத மாநில முதல்-மந்திரிகளிடம் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதாவும் அதையேதான் சொல்கிறார்
ஜெயலலிதாவும் நேற்றைய வெளிநடப்புக்குப் பின்னர் காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளிடம் பாரபட்சமாக மத்திய அரசு நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications