காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு விவகாரத்தில் கபடநாடகமாடும் ஜெ- கருணாநிதி காட்டம்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் விவகாரம் குறித்து திமுக தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்து முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பதில் அறிக்கையாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முதல் அமைச்சர் ஜெயலலிதா டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, வெளியே வந்து செய்தியாளர்களிடம், வெளிநடப்பு செய்திருப்பதாகக் கூறியதோடு, அவசர அவசரமாக சென்னைக்கு வந்து 27ம் தேதியன்று நான் எழுதிய கடிதத்திற்கு நீண்ட பதில் அறிக்கை விடுத்திருக்கிறார். ஜெயலலிதா தமது அறிக்கையின் தொடக்கத்தில், கருணாநிதி தமது அறிக்கையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளிவந்தபோது, இது தமிழகத்திற்குப் பாதகமானது என்று நான் (ஜெயலலிதா) அறிக்கை வெளியிட்டதாகவும், அந்த இறுதித் தீர்ப்பைத்தான் அரசிதழிலே வெளியிட வேண்டும் என்று தற்போது பாரதப் பிரதமருக்குக் கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வெளியிடப்பட்ட பிறகு, 19.2.2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது'' என்று நான் ஏதோ தவறான தகவலைத் தெரிவித்து விட்டதாகக் கூறுகிறார்.
அப்போதைய அதிமுக நிலை
5.2.2007 அன்று காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்த பிறகு, 19.2.2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது என்று, இடையிலே எதுவுமே நடைபெறாததைப் போலச் சொல்லியிருக்கிறார். நான் உண்மையைக் கூறுகிறேன். 5.2.2007 அன்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியான பிறகு, அதிலே என்ன இருக்கிறது என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், 6.2.2007 அன்றே ஜெயலலிதா ஒரு நீண்ட அறிக்கை விடுத்து, அந்த அறிக்கை அ.தி.மு.க. வின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையில் 7.2.2007 அன்று முதல் பக்கத்திலேயே வெளிவந்துள்ளது. அறிக்கையில், "மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தையும் அமைச்சர்களையும் வைத்திருக்கிற கருணாநிதியால் காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தீர்ப்பை முழுமையாகப் பெற்றுத் தரமுடியவில்லை' என்று கூறியுள்ளார். இதற்கு என்ன பொருள்? இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதை முழுமையாகப் பெற்றுத் தரவில்லை என்று தானே குறை சொல்லியிருக்கிறார். அப்படியானால் அந்த இறுதித் தீர்ப்பு சரியில்லை என்று அவர் சொல்வதாகத்தானே பொருள்? அப்படிப்பட்ட இறுதித் தீர்ப்பைத்தானே அரசிதழில் வெளியிட வேண்டும் என்று இப்போது ஜெயலலிதா கோரிக்கை வைக்கிறார்.
"கருணாநிதியின் தொடர் துரோகச் செயலால்தான் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்கு இன்று பாதகமாக வந்துள்ளது. இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று மைனாரிட்டி தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும்''. தமிழகத்திற்குப் பாதகமாக இறுதித் தீர்ப்பு வந்துள்ளது என்று 7.2.2007ல் அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, தற்போது, அப்படி ஒரு அறிக்கையையே வெளியிடாததைப் போல, நான் ஏதோ எனது கடிதத்தில் கற்பனையாகச் சொல்லியுள்ளதைப் போல எழுதுகிறார் என்றால், எது உண்மை, எது பொய் என்பது தெளிவாகிறதா? அல்லவா?
மேலும் ஜெயலலிதா 7.2.2007ல் வெளியிட்ட அறிக்கையில், "நடுவர் மன்றத்தின் இந்த இறுதித் தீர்ப்பை, தான் வரவேற்பதாகவும், இதனால் மகிழ்ச்சி அடைவதாகவும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில் இது வரவேற்கத்தக்க தீர்ப்பு அல்லÓ என்று கூறி, அது அவர்கள் பத்திரிகையிலேயே வெளிவந்துள்ளது.
இவ்வாறு இறுதித் தீர்ப்பை வரவேற்கத்தக்க தீர்ப்பு அல்ல என்று கூறிய ஜெயலலிதா, தற்போது அதே தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டுமென்று பிரதமருக்குக் கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதுகிறார் என்று நான் எழுதியிருந்தேன். அதைத்தான் தவறு என்று இன்றைய தினம் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 5.2.2007அன்று வெளிவந்தது. 19.2.2007 அன்று பதினைந்து நாட்களுக்குள் கழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைவரின் கருத்துக்களையும் கேட்டு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அதற்கே அப்போது ஜெயலலிதா 21.2.2007 அன்று விடுத்த அறிக்கையில் தீர்ப்பு வந்து பதினைந்து நாட்கள் கழித்துத்தான் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியதாக குறை பட்டு கொண்டார்.ஆனால் இப்போது என்ன நிலை?
இறுதித் தீர்ப்பில் ஜெ.வின் முரண்பாடு
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தவுடன் அவசர அவசரமாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், இறுதித் தீர்ப்பு வரவேற்கத்தக்கது அல்ல என்று கூறிய போதிலும், அதன் பின்னர் அந்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று பலமுறை அவர்களுடைய அறிக்கைகள் வாயிலாகவும், பிரதமருக்கு கடிதங்கள் வாயிலாகவும் தெரிவித்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. மேலும் ஜெயலலிதா அப்போது விடுத்த அறிக்கையில், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது என்று நான் சொன்னதாகவும், நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பைவிட இறுதித் தீர்ப்பில் தண்ணீரின் அளவு குறைவாகக் கிடைத்துள்ளது என்றும் கூறியிருந்தார். இதற்கு அப்போதே 8.2.2007அன்று நான் அளித்த பதிலில், "காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது.
"ஆறுதல் தருகிறது" என்று நான் சொன்னதை "மகிழ்ச்சி தருகிறது" என்பதாக அர்த்தப்படுத்திக் கொண்டு அவர் அறிக்கை விட்டது மாத்திரமல்லாமல், நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை விட தண்ணீர் அளவு குறைவாக இறுதித் தீர்ப்பில் கிடைத்துள்ளது என்கிறார் ஜெயலலிதா. இடைக் காலத் தீர்ப்பு 205 டி.எம்.சி. இறுதித் தீர்ப்பு 210 டி.எம்.சி. இது எப்படி இடைக்காலத் தீர்ப்பை விட இறுதித் தீர்ப்பிலே குறைந்து விட்டது என்று பொருள் ஆகும்?Ó என்று தெளிவுபடுத்தியிருந்தேன். 19.2.2007அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கலந்து கொண்டவர்கள் அப்போது நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்களா என்றால், "நடுவர் மன்றம் அத்துமீறி கர்நாடகத்தில் கட்டப்பட்ட ஆயக்கட்டுகளை அங்கீகரிக்கும் அளவில் உத்தரவினைத் தந்துள்ளது, இது விவாதத்திற்குரிய, கண்டிப்பாக எதிர்த்தே தீர வேண்டிய ஒரு விஷயமா கும். தவறுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது'' என்றுதான் சொன்னார்கள். அப்படிப் பாதகமான அம்சங்கள் அடங்கிய நடுவர் மன்றத் தீர்ப்பைத் தான் தற்போது அரசிதழில் வெளியிடவேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்துகிறார்.
திமுகவின் நிலை
அடுத்து ஜெயலலிதா தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை உடனடியாக வெளியிட வேண்டுமென்று 17.12.2012 அன்று கேட்டுக் கொண்டதைப் பற்றி, மிகவும் அநாகரிகமாக, அவர்கள் இறுதித் தீர்ப்பினை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று உண்மையிலேயே வலியுறுத்தினார்களா அல்லது கேட்பது போல ஒரு கபட நாடகமாடி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டனரா என்பது புரியாத புதிராக இருக்கிறது என்று இன்றைய அறிக்கையில் சாடியிருக்கிறார். இது கழக நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமல்ல, பிரதமர் அலுவலகத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துவது போல உள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்த அதே 17.12.2012 அன்று நான் அனைத்து நாளேடுகளுக்கும் விடுத்த அறிக்கையிலேயே நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டுமென்று வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தேன். அத்துடன் அந்த வேண்டுகோள் பற்றி உடனடியாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து முறையிடுவார்கள் என்றும் தெரிவித்தேன்.
உடனடியாக டெல்லியில் உள்ள திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவைத் தொடர்பு கொண்டு, பிரதமரைச் சந்தித்து வேண்டுகோள் விடுக்கக் கேட்டுக் கொண்டேன். அவர்களும் அவ்வாறே அன்றைய தினமே பிரதமரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். அதனை பிரதமர் அவர்களும் கேட்டு, உடனடியாக அது பற்றி கவனிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். வாதத்திற்கு வாதம் பதில் சொல்லலாம். கபட நாடகமாடிகளின் விதண்டாவாதத்திற்கு என்ன பதில் சொல்வது? தமிழ் நாட்டு மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு திமுக தலை வர் கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வாதத்திற்கு வாதம் பதில் சொல்லலாம். கபட நாடகமாடிகளின் விதண்டாவாதத்திற்கு என்ன பதில் சொல்வது? தமிழ் நாட்டு மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கருணாநிதி தமது பதிலறிக்கையில் விவரித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications