அமெரிக்காவில் காணாமல் போனாரா ஆந்திர விஞ்ஞானி? கண்டுபிடிக்க மத்திய அரசுக்கு தாயார் கோரிக்கை
கரீம்நகர்: அமெரிக்காவில் பணியாற்றி வந்த விஞ்ஞானியான தனது மகனைக் காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறும் அவரது தாயார் இந்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆந்திர மாநிலம் கரீம் நகர் மொரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஒர்ரே ராமசுவாமி கடந்த 30 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். சென்னையிலும் டெல்லியிலும் பெங்களூரிலும் பல்வேறு நிறுவனங்களில் அவர் விஞ்ஞானியாகப் பணியாற்றிவிட்டு அமெரிக்கா சென்றதாகவும், ஆனால் கடந்த 30 வருடத்தில் 3 முறை தான் கரீம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு அவர் வந்ததாகவும் தாயார் மால்வியா தெரிவித்துள்ளார்.
கடைசியாக 9 ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்கு வந்தபோது ஒரு பெண்ணின் படத்தைக் காட்டி, இவர் சென்னையைச் சேர்ந்தவர், இவரையே திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றாராம்.
அவர் அமெரிக்காவில் நியூ ஒர்லியான்சில் வசித்தது மட்டுமே இவரது தாயாருக்குத் தெரிந்துள்ளது. மற்றபடி அவரது இருப்பிட விவரமோ, பணியாற்றிய இடமோ, தொலைபேசி எண்களோ தன்னிடம் இல்லை என்று அவரது தாயார் கூறியுள்ளார்.
மேலும் தங்களை மகன் கவனிக்காமல் விட்ட துக்கத்தில் தனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாகவும் வெளியுறவுத்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கடிதம் குறித்து விசாரிதது ராமசுவாமி பற்றிய விவரங்களை சேகரிக்குமாறு அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அவர் உண்மையிலேயே விஞ்ஞானியாகப் பணியாற்றினாரா அல்லது விவரம் தெரியாமல் அவரது தாயார் கூறுகிறாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications