ரூ2,150 கோடி இழப்பீடு தொகையை கட்டக் கோரி 21 கிரானைட் குவாரிகளுக்கு நோட்டீஸ்
மதுரை: முறைகேட்டில் ஈடுபட்ட கிரானைட் குவாரிகளிடமிருந்து இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக 21 கிரானைட் குவாரிகளுக்கு கனிம வளத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை சுற்றுவட்டாரத்தில் செயல்பட்ட கிரானைட் குவாரிகளின் சட்டவிரோத செயல்பாடுகளாள் தமிழக அரசுக்கு ரூ16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்பது முன்னாள் மதுரை ஆட்சியர் சகாயத்தின் அறிக்கையின் சாராம்சம். இதைத் தொடர்ந்து மதுரை ஆட்சியராக பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ரா தலைமையிலான தனிக்குழு 3 மாதமாக கிரானைட் குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தி ஆய்வு நடத்தியது.
மேலும் கிரானைட் குவாரி அதிபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பி.ஆர்.பி. கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமிக்கு அண்மையில்தான் ஜாமீன் கிடைத்தது. மேலும் பல மாதங்களாக தலைமறைவாக இருந்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கும் அண்மையில்தான் முன் ஜாமீன் கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 50 குவாரிகளில் உரிமங்களை அரசின் கனிம வளத்துறை செயலகம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டது. கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகளின் அடிப்படையில் இழப்பீடு தொகையை வசூலிக்க அரசு முடிவு செய்து பி.ஆர்.பி., குமார் உள்ளிட்ட 21 கிரானைட் குவாரிகளுக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு மட்டும் 5 நோட்டீசுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு தொகையாக பி.ஆர்.பி. நிறுவனம் ரூ.700 கோடி, குமார் கிரானைட் நிறுவனம் ரூ.326 கோடி, முருகன் கிரானைட் நிறுவனம் ரூ.137 கோடி, ஸ்ரீ ஓம் ஸ்ரீ கிரானைட் நிறுவனம் ரூ.215 கோடி அரசுக்கு இழப்பீடு தொகை செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 21 குவாரிகளுக்கு இழப்பீடு தொகை ரூ.2150 கோடி செலுத்த நோட்டீசு கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிரானைட் அதிபர்கள் தனிப்படை முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரானைட் முறைகேடு மற்றும் வெடிபொருட்கள் பதுக்கல் தொடர்பாக மதுரை மாவட்ட போலீசார் 65 வழககுகள் பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்குகளிலும் அரசு இடம் ஆக்கிரமிப்பு, நீர்பாசன பகுதிகள் சேதப்படுத்துதல், புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications