கணவன் அல்லது உறவினர்களால் கொடுமைக்கு ஆளாகும் டெல்லி பெண்கள்!... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
டெல்லி: கணவன் அல்லது அவனுடைய உறவினர்களால் டெல்லியில் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்று ஓர் அதிர்ச்சி புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. அடித்து துன்புறுத்துதல், பாலியல் ரீதியான துன்புறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்றன. அங்கு கடந்த 2011ம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிய புகார்கள் 1500 வரை பதிவாகியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற பதிவு துறையினர் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
கணவனுக்கு அடங்கி நடப்பதும் லட்சுமண ரேகையை தாண்டாமல் இருப்பதும்தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்கின்றனர் சில தலைவர்கள். ஆனால் அப்படி இருந்தாலும் கூட கணவனாலும், அவனுடைய உறவினர்காளாலும் துன்புறுத்தலுக்கு ஆளாகி பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் தலைநகரப் பெண்கள்.
வீட்டுப் பொருளாதார சூழ்நிலைக்காக வெளியே வேலைக்கு சென்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் பெண்கள் ஒருபுறம் இருக்கையில் வீட்டிற்குள்ளே இல்லத்தரசிகளாக வலம் வரும் பெண்கள் அடி, உதை மற்றும் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கும் ஆளாகிவரும் அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி பெண்களுக்கு பாதிப்பு அதிகம்
தேசிய குற்ற பதிவு துறையினர் வெளியிட்ட தகவலில், கடந்த 2011ம் ஆண்டு டெல்லி மாநகரில் குடும்ப உறுப்பினர்களால் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 1,498 ஆக உள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட அதிகம் 2010ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 1,273 பதிவாகியுள்ளது. அதுவே 2009ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 1,177 ஆகவும் இருந்துள்ளது.

ஹைதராபாத் 2 ம் இடம்
இந்தியாவில் வளர்ச்சியடைந்த நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் பதிவாகியுள்ளன. ஹைதராபாத்தில் ஜனவரி-டிசம்பர் வரையிலான 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,355 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மும்பை, சென்னையில் குறைவு
டெல்லி, ஹைதராபாத் தவிர பிற மெட்ரோ நகரங்களான கொல்கத்தாவில் 557 வழக்குகளும், பெங்களூரில் 458 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேசமயம் மும்பையிலும்,சென்னையிலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்குகள் 229 மட்டுமே பதிவாகியுள்ளன.

2010ம் ஆண்டில் வழக்குகள்
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு ஹைதராபாத்தில் 1,420 வழக்குகளும், கொல்கத்தாவில் 400 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பெங்களூரில் 398 வழக்குகளும், மும்பையில் 312 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேசமயம் சென்னையில் 125 வழக்குகள் மட்டுமே போலீசாரால் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

2009ல் வழக்கு விபரம்
அதேபோல் கடந்த 2009ம் ஆண்டில் ஹைதராபாத்தில் 1,383 வழக்குகள் அதிகபட்சமாக பதிவாகி உள்ளன. அதேபோல், மும்பையில் 434 வழக்குகளும் கொல்கத்தாவில் 411 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேசமயம் பெங்களூரில் 367 வழக்குகளும் சென்னையில் 154 வழக்குகளும் பதிவாகியுள்ளன என்று அந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை
வீட்டைவிட்டு வெளியே சென்றால்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறப்படும் நிலையில் வீட்டிற்குள்ளேயே அடங்கி ஒடுங்கி இருந்து அடுப்பங்கரையில் வேகும் பெண்களுக்கும் குடும்பத்தினரால் கொடுமை நிகழ்த்தப்படுகிறது. பிற மாநிலப் பெண்கள் தைரியமாக கணவர் மற்றும் உறவினர்களுக்கு எதிராக புகார் கொடுக்க முன் வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டுப் பெண்கள் அதையும் அனுசரித்துக்கொண்டுதான் வாழ்க்கை நடத்துகின்றனர். அதனால்தான் தமிழ்நாட்டில் அதிக அளவில் இதுபோன்ற புகார்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications