எ.வ.வேலு வீட்டில் ரெய்டு! திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை! ஸ்டாலின்
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தி வரும் நிலையில் அந்த பிரச்சினையை சட்டப்படி அவர் நிரூபிப்பார் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளுங்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்! இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் சென்னை, திருவண்ணாமலை பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. இவர் திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர், திமுக எம்எல்ஏக்களின் சட்டசபை கொறடாவாகவும் இருந்து வருகிறார்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலினுடன் நேற்று புதுவையில் எ.வ.வேலு இருந்த நிலையில் இன்று காலை எ.வ.வேலுவுக்குச் சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் திருவண்ணாமலை வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
பொதுவாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் எஃப்ஐஆர் போட்டுவிட்டு இது போன்ற சோதனைகளில் ஈடுபடுவார்கள். ஆனால் எ.வ.வேலு வீட்டில் எதற்காக சோதனை நடைபெறுகிறது, எந்த வழக்கு, யார் புகார்தாரர் போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
எ.வ.வேலு சாலை பணிகள், கட்டிடம் கட்டும் பணிகளுக்கான அமைச்சராக இருந்ததால் அது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. அவரது வீட்டிற்குள் எத்தனை அதிகாரிகள் சென்றுள்ளனர் என்பது குறித்து தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications