பொங்கல் பரிசு: ரேசன் கடைகள் ஞாயிறன்று செயல்படும்

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும், இடர்பாடு பங்கீட்டு முறையின்படி தமிழகத்திற்குத் தர வேண்டிய காவிரி நீரினை கர்நாடகம் திறந்து விட மறுத்ததாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தாமதம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தண்ணீர் திறந்து விடுவதும் நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயப் பெருமக்களும் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி பெறும் 1 கோடியே 84 லட்சம் அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 ரூபாயில் ஒரு கிலோ பச்சரிசியும், 40 ரூபாயில் ஒரு கிலோ சர்க்கரையும் இத்துடன் ரூ.100 ரொக்கத் தொகையும் சேர்த்து மொத்தம் ரூ.160 மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு ஒன்றினை அளித்து முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இந்த அரசாணையினைத் தொடர்ந்து 31.12.2012 தேதியில் புழக்கத்தில் உள்ள அனைத்து அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கீடு உத்தரவினை உணவுப்பொருள் வழங்கல் துறை பிறப்பித்துள்ளது.
மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலர்கள், மாநகர துணை ஆணையாளர் ஆகியோர் உபஒதுக்கீடு உத்தரவு பிறப்பித்து அதன்படி பொங்கல் தொகுப்பு தமிழ்நாட்டிலுள்ள 33,490 கூட்டுறவு மற்றும் அமுதம் நியாயவிலை அங்காடிகள் மூலம் விநியோகம் செய்யப்படும். பொங்கல் தொகுப்பு வழங்குவதை முன்னிட்டு ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டும்பணி இன்றுமுதல் (8-ந் தேதி) முதல் வரும் 17-ந் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது. உள்தாள் ஒட்டும்பணி 18-ந் தேதி முதல் மீண்டும் தொடர்ந்து ரேஷன் கடைகளில் மேற்கொள்ளப்படும்.
இதுவரை குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்ளாத அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் விடுதல் இல்லாமல் வழங்கப்படும். இப்பணியை பொங்கல் பண்டிகைக்கு முன் முடிக்கும் பொருட்டு 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து நியாயவிலை அங்காடிகளுக்கும் வேலை நாளாகவும் இதற்கு பதிலாக 16-ந் தேதி அன்று ஈடுசெய்யும் விடுமுறையாகவும் அறிவிக்கப்படுகிறது.
ஏழை எளிய மக்கள் நலன் கருதி முதல்வர் இச்சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளதால் உணவு, கூட்டுறவு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்தத் திட்டத்தினை சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும் என்று அதிகாரிகளை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சிறப்பு பொங்கல் பரிசு விநியோகம் நடைபெறும் காலத்தில் வழக்கம் போல அனைத்து அத்தியாவசியப் பொருள்களான அரிசி, பருப்பு, பாமாயில் முதலியன தொய்வின்றி வழங்கப்படும். இத்திட்டம் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக போதிய அளவு அரிசி, சர்க்கரை இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications