பெங்களூர் பெண் டெல்லியில் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை: வாங்கியவர் பல முறை கற்பழிப்பு
டெல்லி: கர்நாடகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய டெல்லி நபர் அவரை பல முறை கற்பழித்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார் ஒரு ஆண். கடந்த 6ம் தேதி அப்பெண் அந்த நபருடன் டெல்லி சென்றார். ஆனால் அந்த நபர் வேலை வாங்கிக் கொடுக்காமல் மாறாக அப்பெண்ணை ஜாகீர் என்பவரிடம் ரூ.1 லட்சத்திற்கு விற்றுவிட்டார்.
இளம்பெண்ணை வாங்கிய ஜாகீர் அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரை பல முறை கற்பழித்துள்ளார். அவரது பிடியில் இருந்து தப்பிய அப்பெண் கடந்த 9ம் தேதி கிழக்கு டெல்லியில் உள்ள காசிபூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் 2 பேரையும் கடந்த 11ம் தேதி கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
கற்பழிக்கப்பட்ட பெண் திருமணமானவர். கணவருடன் சண்டை போட்டுவிட்டு கடந்த 1ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியவர் ஆள் கடத்தல் கும்பலிடம் சிக்கினார். அவர்கள் வேலை வாங்கித் தருகிறேன் என்ற பெயரில் டெல்லியில் விற்றுவிட்டனர். அவரைக் காணவில்லை என்று அவரது கணவர் சிக்பல்லபூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த பெண்ணை டெல்லிக்கு ரயிலில் அழைத்துச் சென்று ஹஸ்ரத் நிஜாமுத்தீன் ரயில் நிலையத்தில் ஜாகீரிடம் விற்றனர். அங்கு அவருடன் அவரது கூட்டாளி கீதாவும் வந்திருந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து மும்பை மற்றும் புனேவில் உள்ள சில வாடிக்கையாளர்களிடம் அப்பெண்ணை விற்க முயன்றனர். ஜாகீர் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து காவல் நிலையத்திற்கு வந்துள்ளார் என்றனர்.
விசாரணையின்போது ஜாகீர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு 23 வயது பெண்ணை டெல்லியில் உள்ள ஜி.பி.ரோடு பிராத்தலில் விற்றதாகத் தெரிவித்தார். இதையடுத்து அப்பெண்ணை நேற்று காப்பாற்றிய போலீசார் விபச்சார விடுதியின் உரிமையாளர் மும்தாஜை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications