Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்ஜிஆர் இருந்தபோதே தன்னை முதல்வராக்க ராஜீவுக்கு கடிதம் எழுதியவர் ஜெயலலிதா: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் தென் சென்னை மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் பொங்கல் விழா நடந்தது. அதில் பேசிய கருணாநிதி,

நீங்கள் தான் சட்டம் போட்டு தமிழர் திருநாளை கொண்டாடுவீர்களா? நாங்களும் சட்டம் இயற்றி அந்த நாளை தடுக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லி தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். யார் தடுத்தாலும் நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த நாளை கொண்டாடியே தீருவோம். தமிழகத்தில் வளர்க்கப்பட வேண்டிய கலைகளில் நாட்டுபுற கலைகளும் ஒன்று.

இனி ஆண்டுதோறும் கலை விழாக்கள்:

சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த முடியாதபடி பல இடையூறுகளால் நிறுத்தப்பட்டிருந்த சூழ்நிலையில், இன்று மீண்டும் நாம் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த முற்பட்டு இருக்கிறோம். இனி ஆண்டுதோறும் இதுபோன்ற கலை விழாக்கள் நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழர்கள் சார்பில், குரலை உயர்த்தி செம்மொழி அந்தஸ்தை பெற்றோம். தமிழுக்குச் செம்மொழி தகுதி கிடைப்பதற்கு பரிதிமாற் கலைஞர் முதல் போராடி உள்ளனர். திமுக ஆட்சியின்போது டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்து, தமிழுக்குச் செம்மொழி தகுதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன் பிறகு செம்மொழி தகுதி கிடைத்தது. ஆனால் இன்றைக்கு செம்மொழி நிலை என்ன? உங்களுக்கே தெரியும்.

தமிழ் செம்மொழி என்பதையே எதிர்க்கக்கூடிய ஆட்சிதான் இப்போது நடைபெற்று வருகிறது. தமிழுக்குச் செம்மொழி தகுதி கிடைத்ததற்கு அடையாளமாக செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. அந்த பலகையை ஆட்சிக்கு வந்த நினைவாக ஒரே நாளில் தூக்கி விட்டார்கள். அந்த இடமும் வேறு ஒருவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. தமிழ் மொழியின் முதல் எதிரியாக முதல்வர் ஜெயலலிதா உள்ளார்.

ஏதோ எம்.ஜி.ஆர். பிச்சை போட்டார் என்று சொல்லி...

எனக்கு ஏதோ எம்.ஜி.ஆர். பிச்சை போட்டார் என்று சொல்லி, நான் முதல்வர் ஆனதே எம்.ஜி.ஆரால்தான் என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அது மாத்திரம் அல்ல. கொடநாட்டிலே பேசியிருக்கிறார். கருணாநிதி எம்.ஜி.ஆரிடத்தில் கெஞ்சி கூத்தாடி முதல்வர் பதவியை பெற்றார் என்று.

கொடநாட்டிற்கு போய் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பேச வேண்டிய பேச்சா இது. பேச தேவை இருக்கிறதா? அங்கே கருணாநிதியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? இங்கே தமிழர் விழாவில் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. இது யாருடைய குற்றம். என் மீது கேவலமான, இழிவான ஒரு குற்றச்சாட்டை முதல்வராக இருக்கிற ஒருவரே பேசிய பிறகு, அதை மறுக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறதா? இல்லையா?.

ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினார்:

எம்ஜிஆர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினார். அதில் தன்னை முதல்வராக்கும்படி ஜெயலலிதா கேட்டிருந்தார். இதற்கான ஆதாரத்தைக் கேட்டால் காட்டத் தயாராக இருக்கிறேன்.

இந்த ஆதாரங்கள் இல்லை என்று சொல்லட்டும். யாரையும் ஏமாற்ற முடியாது. இதையெல்லாம் நான் சொல்வதற்கு காரணம், தமிழ்நாட்டுடைய அரசியல் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் சொல்கிறேன்.

தமிழ்நாட்டின் முதல்வராக காமராஜர் இருந்திருக்கிறார். பக்தவச்சலம் இருந்திருக்கிறார். அண்ணா இருந்திருக்கிறார், ஏன் எம்.ஜி.ஆரே இருந்திருக்கிறார். நான் ஐந்து முறை முதல்வராக இருந்திருக்கிறேன். இதுபோன்ற அசம்பாவிதங்கள், இதுபோன்ற தேவையற்ற வீண் வம்புகள் எப்போதாவது நடைபெற்றது உண்டா? தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு அறிவுரைகள்:

இந்த நல்ல விழாவில் சில அறிவுரைகளை ஜெயலலிதாவுக்கு சொல்ல வேண்டிய அளவுக்கு என்னை ஆளாக்கி கொண்டாரே என்பதற்காக வருத்தப்படுகிறேன்.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் 2 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இப்போது அதிமுக ஆட்சியில் 16 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. திமுகவைக் குற்றம்சாட்டுவதை விட்டு இனிமேலாவது எரியாத விளக்குகளை எரிய வையுங்கள். இருண்டு கிடக்கும் நாட்டிலே ஒளி விளக்கு ஏற்றுங்கள். பள்ளமாக இருக்கின்ற பாதைகளை எல்லாம், சாக்கடையில் இருந்து வருகின்ற கொசுக்கள், புழுக்கள், இவைகளால் உற்பத்தியாகின்ற நோய்கள், இவைகளுக்கெல்லாம் இடம் தராமல் மக்களைக் காப்பாற்றுங்கள். அதுதான் ஒரு அரசுக்கு உரிய தேவை.

நானும் தமிழச்சிதான் என்பதுபோல வேடம் போராதீர்கள்:

நானும் தமிழச்சிதான் என்பதுபோல வேடம் போராதீர்கள். வேடம் கலையும். கலைகின்ற காலம் விரைவில் வரும். அது நாடாளுமன்றத் தேர்தலிலே தெரியும். எங்களுடைய கழக தோழர்கள் இவற்றையெல்லாம் பொறுத்து கொண்டிருக்க மாட்டார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுப்பார்கள் என்பது வாக்குச் சீட்டுகளால்தான் கொடுப்பார்கள்.

திமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் இது. அப்படிக்கட்ட கழகத்தை சீரழித்துவிடலாம், பின்னடையச் செய்துவிடலாம் என்று யாராவது கருதினால், அது முதல்வராகவே இருந்தாலும், ஜெயலலிதாவாகவே இருந்தாலும் வெறும் கனவாகவே ஆகிவிடும். கனவாகவே முடிந்துவிடும் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக எடுத்துக்காட்ட விரும்புகிறேன் என்றார் கருணாநிதி.

முன்னதாக கிராமியக் கலைஞர்களின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை கருணாநிதி அரை மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்து பார்த்து ரசித்தார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார்.

திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவைச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதே போன்ற நிகழ்ச்சிகள் இன்று கோட்டூர்புரத்திலும், ஆயிரம் விளக்கு பகுதிகளிலும் நடைபெறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+