மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு காப்பிரைட் அந்தஸ்து!
மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் கோவிலும் மணம் மயக்கும் மல்லிகையும்தான். பிரசித்தி பெற்ற மதுரை மல்லிகைப்பூக்கள் வெளிநாடுகளுக்குக் கூட ஏற்றுமதியாகிறது. இந்த பூவுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இந்தியாவிலேயே மதுரை மல்லிதான் நமது நாட்டின் புவியியல் அடையாளத்திற்குரிய மலராக முதன் முதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் வரும் ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்று டிரேட் மார்க் துணை பதிவாளர் சின்னராஜா ஜி.நாயுடு கூறியுள்ளார்.
மத்திய அரசின் வணிகவியல் துறையின்கீழ் இயங்கும் அறிவுசார் சொத்துரிமைக் கழகம் 27 மாதங் களுக்குப் பிறகு கடந்த செப்டம்பரில் மதுரை மல்லிக்கு இக்குறியீடு வழங்க முடிவு எடுத்தது. தனது 45ம் இதழில் இதற்கான அறிவிப்பை அப்போது வெளியிட்டது. இதற்கு எதிர்கருத்துக்கள் இருப்பின் அது குறித்து தெரிவிக்க 4 மாதம் கால அவகாசமும் வழங்கியது. ஆனால், இந்த 4 மாதங்களில் மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு தருவதற்கு என எந்த ஆட்சேபக் கருத்தும் வரவில்லை. எனவே தற்போது மதுரை மல்லிக்கு ''புவிசார் குறியீடு'' அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தலையில் சூட ஆர்வம்
தமிழ்நாட்டில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் மதுரை மல்லி பயிரிடப்படுகின்றன. இவ்வகை பூக்களின் இதழ்கள் வட்ட வடிவில், நான்கு அடுக்கு கொண்டவை.மதுரை மல்லி மொட்டுக்கள் தாமதமாகவே விரிகின்றன. மனதை மயக்கும் ஆழ்ந்த நறுமணம் கொண்ட இந்த மல்லிகைப் பூக்களை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி சூடுவார்கள்.கருமையான கூந்தலில் வெண்மைநிற மல்லிகையை சூடிக்கொள்வதே தனி அழகுதரும்.

புவிசார் குறியீடு
மதுரை, விருதுநகர், உள்ளிட்ட 5 மாவட்டத்தை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் மதுரை மல்லியை விளைவித்து வருகின்றனர். தனியார் அமைப்பு ஒன்று, மதுரை வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மதுரை மல்லி விவசாயிகள் சங்கம் மூலமாக மதுரை மல்லி பூக்களுக்கு பதிவுரிமை கோரி சென்னையில் உள்ள புவியியல் அடையாள பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்திருந்தது.

ஆட்சேபம் இல்லை
இதையடுத்து சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அலுவலகத்தின் செய்தி குறிப்பில், மதுரை மல்லிக்கு இந்திய புவியியல் அடையாள மலர் என்ற தகுதியை தருவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் நபர்கள் தங்களது கருத்துக்களை எங்கள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை பரிசீலித்த, பதிவகம், பொதுமக்களிடம் இருந்து அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லாததால், மதுரை மலிக்கு புவிசார் குறியீடு வழங்க உள்ளது.

சட்ட ரீதியான பாதுகாப்பு
இந்த குறியீட்டினை 20 ஆண்டுகளுக்கு மதுரை மல்லி விவசாயிகள் பயன்படுத்தலாம். மதுரை மல்லி விவசாயிகள் சங்கத்தினரிடம் பெறும் மல்லிகையை மட்டுமே உலகளவில் ''மதுரை மல்லி'' என்றழைக்க வேண்டும். ஏற்றுமதிக்கு இக்குறியீடு உதவும். மல்லி விவசாயிகளுக்கு கூடுதல் விலை உள்ளிட்ட பலதரப்பட்ட பலன்கள் கிடைக்கும். மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் இந்த ''மதுரை மல்லி'' பெயரில் மற்ற பகுதி மல்லிகைப் பூவை விற்பதோ அல்லது பிற பூக்களை இதனு டன் கலப்படம் செய்வதோ தண்டனைக்குரிய குற்ற மாகும். இதற்கு 2 லட்சம் அபராதத்துடன், 5 ஆண்டு சிறைத்தண்டனை உண்டு.

மல்லிக்கு முதல் அந்தஸ்து
மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மண்ணில் கந்தகம், கால்சியம் அதிகம். ராமநாதபுரம் மாவட்டத்தில் பதியன் செடிகளைப் பெற்று வந்து வளர்த்தாலும் இந்த 5 மாவட்டங்களில் வளரும்போதுதான் அவை ''மதுரை மல்லி''யைத் தருகின்றன. இதே செடியை நட்டு வளர்த்தாலும் கோவை போன்ற ஊர்களில் இவ்வகை ''மதுரை மல்லி'' விளையாது.
எனவே விளை பொருட்கள் பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம் (2002)ன் படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தியாவிலேயே முதல் முறையாக பதிவுரிமை மற்றும் பாதுகாப்புரிமை பெற்ற முதல் மலர் என்ற பெருமையை மதுரை மல்லி பெறுகிறது.

''பதியனுக்கு'' புவிசார் குறியீடு
மதுரை மல்லிக்கான செடிகள் ராமநாதபுரம் மாவட்டத்தின் தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், நொச்சியூரணி, தண்ணீரூற்று, செம்மமடம் எனும் 20க்கும் அதிக கிராமங்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வளர்கின்றன. 5 மாவட்டங்களில் வளரும் மல்லிகைப்பூக்களுக்கே தற்போது ''புவிசார் குறியீடு'' வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தங்கள் மாவட்டத்தில் விளையும் ''பதியன்களுக்கென தனி புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்க முடிவு எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications