திருச்சி சிவா மகள் திருமணத்தில் கருணாநிதி- விஜயகாந்த் சந்திப்பு?
திருச்சி: திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா மகள் திருமணத்தின்போது திமுக தலைவர் கருணாநிதியும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் சந்திக்கப் போவதாக அரசியல் களத்தில் புதிய சலசலப்பு கிளம்பியுள்ளது.
அதிமுக கூட்டணியை விட்டு தேமுதிக துரத்தப்பட்டு விட்டது. தமிழகத்தின் கூட்டணி அரசியல் இலக்கணப்படி மற்றும் இதற்கு முந்தைய மரப்புப் படி திமுகவுடன்தான் அது கூட்டணி சேர்ந்தாக வேண்டும். இல்லையென்றால் தனியாக போட்டியிட வேண்டும். தனியாக போட்டியிடுவது என்பது தற்கொலைக்குச் சமமானது என்பதால் தேமுதிகவினர் அதை விரும்பவில்லை. மாறாக திமுகவுடன் போய்ச் சேர்ந்து விட வேண்டியதுதான் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளனர்.
இருந்தாலும் திமுகவுடன்தான் அடுத்த கூட்டணி என்று பச்சையாக சொல்ல விஜயகாந்த்துக்கு மனம்இல்லை என்றுதெரிகிறது. இதனால் மெல்ல மெல்ல திமுகவுடன் கூட்டணி என்பதை வெளிப்படுத்த தேமுதிக தலைமை விரும்புகிறது. அதற்கேற்ப திமுக தலைமையும் மெதுவாக காய் நகர்த்தி வருகிறது.

ரெண்டு கண்ணும் போகனும் - இது தேமுதிக
தேமுதிகவைப் பொறுத்தவரை வருகிற லோக்சபா தேர்தலில் நமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, அதிமுகவுக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும், அதாவது அது எங்குமே வெற்றி பெறக்கூடாது என்ற தீவிர எண்ணத்தில் உள்ளது.

டெல்லியில் மீண்டும் செல்வாக்கு -இது தி்முக
திமுகவைப் பொறுத்தவரை, அதிக தொகுதிகளில் வென்று மீண்டும் டெல்லியில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த ஆர்வமாக உள்ளது. அதற்கு அக்கட்சிக்கு தேமுதிகவின் தயவு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அதிமுகவை வீழ்த்த நிச்சயம் திமுகவின் உதவி தேமுதிகவுக்குத் தேவை.

உடன்பாடு முடிந்தது?
இப்படி இரு கட்சிகளுக்கும் ஒத்தாசையும், உறுதுணையும் தேவை என்பதால் இரண்டையும் ஒன்றுசேர்க்க பலதரப்பிலும் முயற்சிகள் சூடு பிடித்துள்ளன. பேச்சுவார்த்தைகள் முடிந்து, உடன்பாடு ஏற்பட்டு விட்டதாகவும் கூட செய்திகள் கூறுகின்றன.

சந்திப்பு நடக்குமா?
இந்த நிலையில் திருச்சி சிவா எம்.பி மகளின் திருமணத்தில் வைத்து இரு கட்சிகளின் தலைவர்களும் சந்திக்கப் போவதாக ஒரு தகவல் பரவியுள்ளது. திருச்சி தேசிய கல்லூரி மைதானத்தில், பிப்ரவரி 7ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. கருணாநிதி தலைமை தாங்குகிறார். மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அத்தனை பேரும் திரண்டு வருகிறார்கள்.

விஜயகாந்த் வருவாரா?
திருமணத்திற்கு விஜயகாந்த்தையும் நேரில் சென்று அழைத்துள்ளார் சிவா. விஜயகாந்த்தும், நேரம் இருந்தால் கண்டிப்பாக வருவதாக கூறியுள்ளார். காரணம், திருமண நாளில் அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக வேண்டும் என திண்டுக்கல் கோர்ட் விஜயகாந்திற்கு உத்தரவிட்டுள்ளது. எனவே அங்கு செல்லவுள்ளார் விஜயகாந்த்.

கோர்ட்டுக்குப் போய் விட்டு வரலாம்
கோர்ட்டுக்குப் போய் விட்டு வழியில் திருச்சி சென்று திருமணத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்படி வந்தால் அவர் கருணாநிதியை சந்திப்பார் என்று தெரிகிறது. கருணாநிதியை, விஜயகாந்த் சந்தித்தாலே அது பெரிய செய்திதான் என்பதால் இந்த சந்திப்பும், வருகையும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
பார்க்கலாம்... என்ன நடக்கப் போகிறது என்று!












Click it and Unblock the Notifications