பிப்ரவரி 1ம் தேதி கூடும் சட்டசபை.. ரோசய்யா உரையில் முக்கிய அறிவிப்புகள்?
சென்னை: தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் பிப்ரவரி 1ம் தேதி ஆளுநர் ரோசய்யாவின் உரையுடன் தொடங்குகிறது. இந்த உரையில் முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 1ந் தேதி தொடங்குகிறது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
ஆளுநர் உரையில் முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக மின்வெட்டு, பாசனத்திற்கு தண்ணீர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடும் அதிருப்தியில் உள்ள காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் வகையிலான அறிவிப்புகள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தக் கூட்டத் தொடர் ஒரு வாரம் நடைபெறலாம் என்று தெரிகிறது. ஆளுநர் உரை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும். இறுதியில் முதல்வர் ஜெயலலிதா விவாதத்திற்குப் பதிலளிப்பார்.
கடந்த ஆண்டு நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து நாக்கைத் துறுத்தி, கையை உயர்த்தி, விரல் நீட்டிப் பேசி சஸ்பெண்ட் ஆனார் தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த். அது முதல் அவர் அவைக்கு வருவதே இல்லை. இந்த முறையும் அவர் அவைக்கு வருவாரா என்பது சந்தேகமாக உள்ளது. அப்படியே வந்தாலும் அவர் அவைக்குள் வராமல் லாபி வரை வந்து கையெழுத்துப் போட்டு விட்டுப் போய் விடுவார் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications