ராஜஸ்தானில் குடிகார தந்தை கடித்து குதறிய 5 மாத சிசு மரணம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் குடிகாரத் தந்தையால் கண்மூடித்தனமாக கடித்துக் குதறப்பட்ட பச்சிளம் குழந்தை மரணமடைந்தது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரில் வசிக்கும் 2 குழந்தைகளுக்கு தந்தையான ஒரு நபர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தன் மனைவியிடம் தகராறு செய்வாராம். கடந்த 26-ம் தேதி போதையில் வந்த அவர் வழக்கம்போல் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது குழந்தைகள் பயத்தில் அழத் தொடங்கின.
அப்போது போதை வெறியில் இருந்த அவன், பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் அடித்தான். மூத்த குழந்தையை கடுமையாக அடித்த அவன், 5 மாத கைக்குழந்தையின் மூக்கு, உதடு மற்றும் கன்னத்தை கடித்து குதறினான். இதனால் அந்த பச்சிளம் குழந்தை பலத்த காயம் அடைந்தது. உடனடியாக அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
கடந்த 1ம் தேதி குழந்தைக்கு முதற்கட்ட ஆபரேஷன் செய்யப்பட்டது. இரண்டாம் கட்டமாக இன்னும் ஒரு மாதத்தில் ஆபரேஷன் செய்யப்படுவதாக இருந்தது. இந்நிலையில், இன்று மூச்சுவிடத் திணறிய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதற்கிடையில் குழந்தையைக் கடித்துக் குதறி காயப்படுத்தி குடிகாரத் தந்தையை, குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். குழந்தை மரணமடைந்ததை அடுத்து தற்போது கொலை குற்றவாளியாக உள்ளார்.












Click it and Unblock the Notifications