விவசாயிகளுக்கான தமிழக அரசின் நிவாரணத் தொகை போதுமானது அல்ல: கருணாநிதி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் உரையிலே தங்களுக்கான நிவாரணத் தொகைகள் பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம்தான் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் உரையிலேயே அறிவிப்புகளையும், அரசின் கொள்கைகளையும் இணைத்து, அந்த உரையின் மீது அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக எடுத்துரைத்து, அதற்கு முதல் அமைச்சர் விளக்கமளிப்பதுதான் எப்போதும் கடைப்பிடிக்கப்படுகின்ற சட்டப்பேரவை நடைமுறை.
நேரம் ஒதுக்கவில்லை
ஆனால் இந்த ஆண்டு, ஆளுநர் உரையிலே அரசின் கொள்கை அறிவிப்புகளோ, திட்டங்களோ இடம் பெறவில்லை; அதன் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் தங்கள் கருத்துகளைப் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை; அப்படி அவர்கள் பேசியிருந்தால் தானே அதற்குப் பதிலளிக்க வேண்டும்; எனவே யாருடைய பேச்சுக்கும் விளக்கமளிக்க வேண்டிய அவசியமே முதல்வருக்கு ஏற்படவில்லை; அதற்கும் மேலே, தி.மு.கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையிலே இருந்தால் மக்கள் நலன் கருதி, ஜனநாயக ரீதியாக எதிர்க் கேள்வி கேட்பார்களே என்பதற்காக, அவர்களையெல்லாம் முதல்நாளே கவனமாக இந்தத் தொடர் முழுவதும் அவைக்கே வரக் கூடாது என்று நீக்கி விட்டார்கள்.
ரூ40 ஆயிரம், ரூ25 ஆயிரம்
இப்படித் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா, பேரவையிலே ஆளுங்கட்சியினரின் பலத்த கையொலிக்களுக்கிடையே அறிவிப்புகளைச் செய்திருக்கிறார். குறுவைப் பயிரையும், சம்பாப் பயிரையும் இழந்து நிற்கும் விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு முதலில் 40 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண உதவி கேட்டு, குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாயாவது கொடுத்தே ஆக வேண்டுமென்று கோரிக்கைகளைத் தொடர்ந்துவைத்ததுடன், பல்வேறு வகையான போராட்டங்களையும் நடத்தினார்கள். தமிழகத்திலே உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தக் கோரிக்கையை வழிமொழிந்து, வலியுறுத்தின.
போதவே போதாது
ஆனால் நிவாரணமாக என்ன அறிவிக்கப்பட்டுள்ளது? 50 சதவிகிதத்திற்கு மேல் மகசூல் பாதித்துள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளின், 3 லட்சத்து 61 ஆயிரம் ஏக்கர் பயிர்களுக்கு மட்டுமே; ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா படித்திருக்கிறார். அப்படியானால், 50 சதவிகிதத்திற்குக் குறைவாக மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கதி என்ன? 50 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட 15 ஆயிரம் ரூபாய் என்பது முழுவதையும் தமிழக அரசே தரப்போகின்ற நிவாரணமா? பேரிடர் நிவாரணம், வேளாண் பயிர்க் காப்பீட்டுத்தொகை ஆகியவை எல்லாம் சேர்ந்தது தானே! அப்படியானால், தமிழக அரசு நிவாரணத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு அளிக்கப் போகின்ற தொகைதான் எவ்வளவு? தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தொகை போதவே போதாது என்று விவசாயிகள் எல்லாம் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
60% பயிர்கள் கருகின
தண்ணீர் இல்லாத காரணத்தால், சாகுபடியே செய்யாமல் வாழ்வாதாரத்தை அடியோடு இழந்த பல லட்சம் விவசாயிகளுக்கு என்ன நிவாரணம் என்பதும் முதல் அமைச்சரின் அறிக்கையிலே படிக்கப்படவில்லை. 4-2-2013 அன்று உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், "தமிழகத்தில் 9 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது, அதில் 3 லட்சம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ள பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகி விட்டன; 3 லட்சம் ஏக்கர் சாகுபடி முடிவடைந்துவிட்டது; மீதம் 3 லட்சம் ஏக்கர் உள்ளது என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார். இதைத் தவிர குறுவைச் சாகுபடியில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களில் 14 லட்சம் ஏக்கரில் இந்த ஆண்டு சம்பா மட்டும் சாகுபடி செய்யப்பட்டூள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. இதில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 60 சதவிகித பயிர்கள் கருகிப் போய்விட்டன.
கூட்டுறவுக் கடன் என்னானது?
இவ்வாறு உண்மைப் புள்ளி விவரம் இருக்க முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளின் 3 லட்சத்து 61 ஆயிரம் ஏக்கருக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்க முன் வந்திருப்பது என்பது ஏதோ நாங்களும் உதவி செய்தோம் என்ற அளவில் தான் உள்ளது. கரும்பு விவசாயம் செய்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை பற்றி முதல் அமைச்சர் எதுவும் கூறவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் என்பது பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பாதி பேருக்குக் கூடக் கிடைக்காத நிலை தான் தற்போது உள்ளது.
விவசாயத் தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டு மென்று நானும் எழுதியிருந்தேன். மற்றவர்களும் கேட்டிருந்தார்கள். அதுபற்றி முதலமைச்சரின் நீண்ட அறிவிப்பில் எந்தத் தொகையும் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் முழுவதையும், டெல்டா மாவட்டங்களின் அசாதாரண நிலைமைகளைக் கருதி, ரத்து செய்திட வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கைக்கும் எவ்வித விளக்கமும் தரப்படவில்லை.
விவசாயிகள் தற்கொலை
தற்கொலை செய்து கொண்டு இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு பத்து இலட்சம் ரூபாய் வீதம் நிவாரணத் தொகை வழங்கிட வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மேலும் இறந்த விவசாயிகளின் குடும்பங்களில்தலா ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிட வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த அரசின் சார்பில் நீதிமன்றத்திலே தாக்கல் செய்த பதிலிலேயே விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறி, தற்போது அதைத் திருத்திக் கொண்டு, ஒன்பது விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்ததை ஒப்புக் கொண்டு, ஆனாலும் அதற்கு பயிர் இழப்பு காரணமில்லை என்று பூசி மெழுகிட முயன்றிருக்கிறார்கள். இது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போலத்தான் உள்ளது.
அதிலே இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் என்பது மிகவும் குறைவானத் தொகையாகும். அந்தத் தொகையை அதிகப்படுத்த வேண்டுமென்றும், தற்கொலை செய்து கொண்டு இறந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிட வேண்டுமென்றும் மீண்டும் வலியுறுத்துகிறேன். எப்படியோ, வரப்போகிறது, வரப்போகிறது என்று விவசாயிகள் எல்லாம் மிக ஆவலோடு பல மாதங்களாக எதிர்பார்த்திருந்த நிலையில்- மிகவும் தாமதம் செய்யப்பட்டு வந்துள்ள அறிவிப்பும் கண் துடைப்பாக இருக்கிறதே தவிர, விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்துக் கவலையைப் போக்கக் கூடிய
வகையிலே இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications