ஜம்மு காஷ்மீரில் மதரஸாவில் இருந்து தப்ப முயன்ற 11 வயது சிறுவனின் காலில் சூடு வைத்த ஆசிரியர்கள்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் மதரஸா ஒன்றில் இருந்து தப்பித்துச் செல்ல முயன்ற 11 வயது சிறுவனுக்கு 2 ஆசிரியர்கள் சூடு வைத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் ஆதர்கோட்டில் உள்ளது நஸுரத் உல் உலூம் மதரஸா. அங்கு தங்கி படித்து வருபவர் முகமது முஷரப்(11). கடந்த சில நாட்களுக்கு முன்பு முஷரப் மதரஸாவில் இருந்து தப்பித்துச் செல்ல முயன்று சிக்கியுள்ளார். அவரின் செயலுக்கு தண்டனையாக அன்வர் உல் ஹக் மற்றும் அகமது ஜமீல் ஆகிய 2 ஆசிரியர்கள் இரும்புக் கம்பியை காய வைத்து சிறுவனின் கால்களில் சூடு போட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சிறுவனின் உறவினர் அவரை பார்க்க நேற்று மதரஸாவுக்கு சென்றபோது இந்த சம்பவம் குறித்து தெரிய வந்தது. உடனே அவர் இது குறித்து ரஜோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 2 ஆசிரியர்களையும் கைது செய்தனர்.
சூடு போட்டதால் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜோரி மாவட்டத்தில் அண்மையில் இது போன்று 2 சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி ரஜோரி மாவட்ட பள்ளியில் தாமதமாக வந்ததற்காக ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் 9 வயது சிறுமியின் வலது கை ஒடிந்தது. முன்னதாக ஆகஸ்ட் 18ம் தேதி இதே ரஜோரி மாவட்டத்தில் ஆசிரியர் அடித்ததில் ஒன்பதாவது வகுப்பு மாணவருக்கு சிறுநீரகம் செயலிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications