For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் பிறந்தநாளில் ஆடம்பரம் கூடாது; என்னை சந்திக்கவும் வேண்டாம்: அதிமுகவினருக்கு ஜெ. கோரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

Jayalalithaa
சென்னை: தன்னுடைய பிறந்தநாளை ஆடம்பர விழாவாக கொண்டாட வேண்டாம் என்றும், அன்றைய தினம் தன்னை யாரும் சந்திக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும் முதல்வர் ஜெயலலிதா அதிமுக தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் அதிமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற பேரறிஞர் அண்ணாவின் அமுத மொழிக்கேற்ப, ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் உங்கள் அன்புச் சகோதரியின் அரசு விலையில்லா அரிசி, தாலிக்கு தங்கம், விலையில்லா சீருடைகள், புத்தகங்கள்,

நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, காலணிகள், மடிக்கணினி மற்றும் ஊக்கத் தொகை ஆகியவற்றுடன் கூடிய கட்டணமில்லா கல்வி, விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்குதல் போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி, ஏழைகளின் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு வருவதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

"மக்கள் தொண்டே மகேசன் தொண்டு" என்பதற்கேற்ப புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காட்டிய பாதையில் பொது வாழ்வை மேற்கொண்டு வரும் நான், எப்பொழுதுமே எனது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியதில்லை.

எனவே, கழக உடன் பிறப்புகள் எனது பிறந்த நாளையொட்டி ஆடம்பர விழாக்களைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் என்னுடைய பிறந்த நாளன்று யாரும் என்னை சந்திக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அதே வேளையில், எனது பிறந்த நாளையொட்டி கழக உடன்பிறப்புகள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தால், அது பயன்பெறுவோரை மகிழ்விக்கும். அதே போல், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகளாகிய உங்களுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் நாளும் உழைத்திடும் பெரு வாய்ப்பு பெற்ற என்னை மேலும் உற்சாகப்படுத்தும் என்பதை உங்கள் அனைவருக்கும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு மாறாக, கழக உடன்பிறப்புகள் யாரேனும் பிரம்மாண்ட விழாக்களையோ, அவசியமற்ற ஆடம்பரத்தையோ கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினால் அது என்னை வருத்தப்படுத்துமே தவிர திருப்திபடுத்தாது.

தமிழக மக்களின் நலன் கருதி, இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும்; தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்; இலங்கை வாழ் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்;

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோள்களுடன் செயல்பட்டு வரும் எனக்கு, என்னுடைய பிறந்த நாள் விழாவை நீங்கள் விமரிசையாக கொண்டாடுவதை விட, நாளும், பொழுதும் மக்கள் பணியாற்றி அவர்களுடைய இதயத்தில் இடம் பிடித்து, அதை வாக்குகளாக மாற்றி, அதன் மூலம் வருகின்ற நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிக் கனியை பறிக்கும் வகையில் செயல்படுவது தான் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

ஆகவே, இதனைச் செயல்படுத்திட இன்றே தயாராகுங்கள் என்று கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
CM cum ADMK chief Jayalalithaa has requested her party cadres not to celebrate her birthday grandly. She has also requested them to avoid meeting her on her B'day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X