ஹெலிகாப்டர் ஊழலை விசாரிக்க ஜே.பி.சி: இது ஜே.பி.சி அல்ல, 'சிடபிள்யூசி' என்கின்றன எதிர்க்கட்சிகள்!
டெல்லி: இத்தாலியிடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவை (ஜே.பி.சி.) அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தன.
ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பான விவாதம் ராஜ்யசபாவில் நடந்தது. அப்போது இந்த ஊழல் குறித்து விசாரிக்க 30 லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) அமைக்கும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய பாஜக, ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், அஸ்ஸாம் கண பரிஷத் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தை திசை திருப்பி, மூடி மறைக்கவே ஜே.பி.சி. அமைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினர். பின்னர் வெளிநடப்பும் செய்தனர்.
முன்னதாக மிகப் பரபரப்பாக நடந்த விவாதத்தில் பேசிய பாஜக எம்பி பிரகாஷ் ஜவேத்கர், மிக, மிக ஊழல் மலிந்துள்ள ராணுவ அமைச்சகத்துக்கு ஏ.கே.ஆண்டணி தலைமை வகித்து வருகிறார். இந்த ஊழல் குறித்து அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒவ்வொரு ஊழல் வெளிவரும்போதும் முதலில் அதை காங்கிரஸ் மறுக்கிறது. 2வதாக, ஊழல் உறுதியானதும் விசாரணை நடத்துவதை தாமதம் செய்கிறது. 3வதாக எதிர்க் கட்சிகள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் மீது பழி போடுகிறது. 4வதாக நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் நடவடிக்கை எடுக்கிறது. அதுவும் வேண்டா வெறுப்பாக, அரைகுறை மனதோடு நடவடிக்கை எடுக்கிறது என்றார்.
இது ஜேபிசி அல்ல, இது சிடபிள்யூசி-அருண் ஜேட்லி:
பாஜக எம்பி அருண் ஜேட்லி பேசுகையில், இத்தாலியில் நடந்த இவ்வளவு பெரிய ஊழலை 30 பேர் கொண்ட இந்திய எம்பிக்கள் குழுவால் எப்படி விசாரிக்க முடியும்?. அந்த நாட்டிடம் விவரம் கேட்டு கடிதம் எழுதினால் அதற்கு பதில் கூட தர மறுக்கிறார்கள். இந் நிலையில், இந்தக் குழுவால் எப்படி இந்த ஊழலை விசாரிக்க முடியும். அதுவும் இதன் தலைவராக இருக்கப் போகிறவர் காங்கிரஸ் தலைவர். இதனால் இது ஜேபிசி அல்ல, இது சிடபிள்யூசி (காங்கிரஸ் காரிய கமிட்டி).
இவ்வழக்கில் தொடர்புடைய வெளிநாட்டவர்களை நாடு கடத்தி, இங்கு அழைத்து வந்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். இதற்கான அதிகாரம் ஜே.பி.சிக்கு இல்லை. இது வழக்கை திசை திருப்பும் முயற்சி என்றார்.
தொடர்ந்து பேசிய அருண் ஜேட்லி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரைன், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சிவானந்த திவாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோர், எதிர்க் கட்சி தலைவர் தலைமையில் ஜேபிசியை அமைத்தால் அதை ஒத்துக் கொள்வதாகவும், கூட்டுக் குழு வெறும் கண் துடைப்பு என்றும், பிரச்சனையை திசை திருப்பும் முயற்சி என்றும் கூறினர்.
மேலும் சிபிஐ விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்றும், காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ராஜினாமா செய்ய முடிவெடுத்தேன்-ஏ.கே.ஆண்டனி:
இந்த விவாதத்துக்கு பதில் அளித்து பாதுகாப்பு அமைச்சர் ஆண்டணி பேசுகையில், ஒரு ஊழல் வெளிவரும்போது ஒவ்வொருவருக்கும் அது பெருத்த அவமானம், வெட்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். நாங்கள் இந்த ஊழலை மூடி மறைக்க முயற்சிக்கவில்லை. எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எங்கள் கட்சி எதையும் மூடி மறைக்கும் கட்சி அல்ல. இந்த ஊழலுக்கு யார் காரணம் என்று அடிமட்டம் வரை சென்று கண்டுபிடிக்க இருக்கிறோம்.
இது மிகவும் தீவிரமான விவகாரம். ஹெலிகாப்டர் ஊழலில் நான் சும்மா இருந்தேன் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட பின் மெக்கனிக்கா, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் அதிகாரிகள் கைதான தகவல் வெளியான உடனேயே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதன்படி விசாரணை நடத்திய சிபிஐ முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், முன்னாள் விமானப்படை தலைமை தளபதி எஸ்.பி.தியாகி உள்பட 11 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு இத்தாலி சென்று உள்ளது. அந்தக் குழு உண்மையை வெளிக்கொண்டு வரும்.
இந்த ஊழல் வெளியானதும் நான் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்தேன். பின்னர், அதை மாற்றிக் கொண்டேன். நான் உண்மையை அறிய விரும்புகிறேன். நான் ஓடிப்போக மாட்டேன். தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன். அவர் யாராக இருந்தாலும், அதற்கான விளைவை சந்தித்தே ஆக வேண்டும். எந்த நிறுவனம் தவறு செய்துள்ளது என்று கண்டுபிடித்து அந்த நிறுவனத்தை ‘கறுப்பு பட்டியலில்' சேர்க்க உள்ளோம். இழந்த ஒவ்வொரு ரூபாயும் திரும்பக் கொண்டு வரப்படும். மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில்தான் செலவு செய்கிறோம். இந்த பணத்தை சுரண்டியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அந்த விலையை கொடுத்தே ஆக வேண்டும்.
சிபிஐ அறிக்கை கிடைத்ததும், தவறு செய்தவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கச் செய்யப்படும். இதை அரசியல் ஆக்காதீர்கள். எதிர்க் கட்சிகளை திருப்திப்படுத்த நினைத்தோம். உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க நினைத்தோம். ஆகவே, நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க முடிவு செய்தோம்.
இத்தாலியில் நடக்கும் விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதன் முடிவுகள் விரைவில் வரும்.
சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடக்க வேண்டும் என்கிறீர்கள். சுப்ரீம் கோர்ட்டும் சிபிஐயும் என் கையில் இல்லை என்றார்.
ஆனால், இதை ஏற்காமல் எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதையடுத்துப் பேசிய அமைச்சர் கமல்நாத், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யவில்லை. அவர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர் என்றார்.
கூட்டுக்குழு அமைப்பதற்கு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
விவாதத்தின் இறுதியில், 30 எம்.பிக்களைக் கொண்ட கூட்டுக்குழு அமைப்பதற்கான தீர்மானத்தை அமைச்சர் கமல்நாத் முன் மொழிந்தார். இதை எதிர்த்து எதிர்க் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேறியது.












Click it and Unblock the Notifications