ரூ 52000 கோடி கடன் தள்ளுபடி திட்டத்தில் ஊழலா? - அதெல்லாம் ஒண்ணுமில்ல! - அமைச்சர் சரத் பவார்

மத்திய அரசின் ரூ.52 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து வேளாண்துறை அமைச்சர் சரத் பவார், தலைநகரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில், "விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது என்று மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக வங்கிகளுக்குப் பணம் அனுப்பப்பட்டது. ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் மேற்பார்வையின் கீழ், வங்கிக் கணக்குகள் மற்றும் பயனாளிகளின் பட்டியலை வங்கிகள் தேர்வு செய்தன. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் நேரடியாக மாற்றப்பட்டது. இதில் முறைகேடு என்ற கேள்வி எங்கிருந்து வந்தது?
எனினும், வங்கிகள் தயாரித்த பயனாளிகள் பட்டியலில், கடன் பெறத் தகுதி படைத்த விவசாயிகளின் பெயர்கள் சேர்க்கப்படாமல் போனதற்கும், தகுதியற்ற விவசாயிகள் சேர்க்கப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. மொத்தமுள்ள 3.7 கோடி வங்கிக் கணக்குகளில், வெறும் 90,576 கணக்குகளை மட்டுமே சி.ஏ.ஜி. அமைப்பு மாதிரிக்கு எடுத்துக் கொண்டது. இதற்கு, 0.25 சதவீத கணக்குகள் மட்டுமே தணிக்கை செய்யப்பட்டன என்று அர்த்தம்.
இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட இவ்வளவு பெரிய திட்டம் குறித்து, இவ்வளவு சிறிய எண்ணிக்கையைக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவதா? கணிசமான வங்கிக் கணக்குகளைக் கொண்டு இந்தத் தணிக்கையை சி.ஏ.ஜி. மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சரியான முடிவுகள் கிடைக்கும்.
சி.ஏ.ஜி.யின் முதற்கட்ட அறிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சகம் ஒரு கடிதத்தை ரிசர்வ் வங்கிக்கும், நபார்டு வங்கிக்கும் எழுதியது. அதில், 'சி.ஏ.ஜி. மேற்கொண்ட தணிக்கை போதுமானது அல்ல என்றும் கூடிய விரைவில் அனைத்து வங்கிக் கணக்குகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும்' என்றும் குறிப்பிட்டது.
கடன் பெறத் தகுதியற்ற விவசாயிகளிடம் இருந்து, ஏற்கெனவே அளித்த பணத்தை வங்கிகளால் மீட்க முடியும். தகுதியுள்ள விவசாயிகளுக்கு பலன்களை அளிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டியுள்ளது. இப்போது இந்த விஷயத்தில் பட்ஜெட் ஒதுக்கீடு ஏதும் செய்யப்படவில்லை. எனினும், இதில் என்ன செய்யலாம் என்று நாங்கள் யோசிப்போம்," என்றார்.












Click it and Unblock the Notifications