அணு உலை எதிர்ப்பாளர் மனைவி கணக்கில் ரூ.30 லட்சம் டெபாசிட்: வந்தது எப்படி?-மத்திய அரசு விசாரணை!

கூடங்குளம் பஞ்சாயத்து 14வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் குமார். இவர் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். இது தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த இவர் தற்போது கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வருகிறார்.
குமார் மனைவி அம்பிகா. இவர் கடந்த 3ம் தேதி கூடங்குளத்தில் உள்ள கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கினார். கடந்த 5ம் தேதி லண்டனிலிருந்து ஆன் லைன் மூலம் 29 லட்சத்து 92 ஆயிரத்து 830 ரூபாய் இவரது கணக்கிற்கு அனுப்பப்பட்டது. லண்டனை சேர்ந்த ஆனந்த் என்பவர் இந்த பணத்தை டெபாசிட் செய்திருப்பது தெரிய வந்தது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு வெளிநாட்டிலிருந்து ரூ.30 லட்சம் அனுப்பப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
மேலும் அம்பிகா, குமாரிடம் பணம் அனுப்பிய ஆனந்த் யார், எதற்காக இவ்வளவு தொகை அனுப்பினார் என்பது குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக குமார் கூறுகையில், நாசரேத்தை சேர்ந்த எனது நண்பர் ஆனந்த் லண்டனில் வசிக்கிறார். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். ஆனந்த் நிலம் வாங்குவதற்காக எனது மனைவி கணக்கிற்கு அவர் பணம் அனுப்பியுள்ளார். அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கும் இந்த பணத்திற்கும் சம்பந்தம் இல்லை. எனது தொழிலை முடக்கி என்னை பழி வாங்குவதற்காக போலீசார் வதந்தியை பரப்பியுள்ளனர் என்றார்.
இதுகுறித்து கூடங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜராம் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். அந்த பணத்தை முடக்கி வைக்குமாறு வங்கிக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.
இதனால் போராட்டக்குழு சேர்ந்தவர்களின் வங்கி பரிவார்த்தனை, தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் ஆகியவை குறிதது மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த நிலையில் போராட்டக்குழுவை சேர்ந்த ஒருவரின் மனைவிக்கு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications