தஞ்சை வருகிறார் ஜெ... நாளை விவசாயிகள் நடத்தும் பாராட்டு விழாவில் பங்கேற்பு
தஞ்சாவூர்: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிட சட்டப்படியான நடவடிக்கை எடுத்து வெற்றி பெற்றதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாளை விவசாயிகள் தஞ்சாவூரில் பாராட்டு விழா நடத்துகின்றனர். இதில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா நாளை தஞ்சை வருகிறார்.
தஞ்சையில் நாளை மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை வருகிறார்.
தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொது செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் தலைமை தாங்குகிறார். தமிழக விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப்பேசுகிறார். விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு ஏற்புரை நிகழ்த்துகிறார்.
விழாவில் அமைச்சர்கள், காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் சார்பில் பொன்னியின் செல்வி வெண்கல சிலை நினைவு பரிசாக வழங்கப்படுகிறது. தஞ்சை பாராட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு அன்றே முதல்வர் ஜெயலலிதா கார் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார்.
முதல்வர் வருகையையொட்டி தஞ்சை முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. அதிமுக சார்பில் எங்கு பார்த்தாலும் தடபுடலாக முதல்வரை வரவேற்று பேனர்கள், போஸ்டர்கள் வைத்துள்ளனர். அதிமுக கொடி நகரெங்கும் பறந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications