Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது ஏன்?: பிரதமருக்கு ஜெ. கேள்வி.

Subscribe to Oneindia Tamil

Jaya questions PM's silence over SL issue
சென்னை: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

இலங்கையில் இறுதி கட்டப்போர் நடந்தபோது நிகழ்ந்த இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள உணர்வை சிங்கள அரசு தொடர்ந்து புறக்கணிப்பது, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகம் முழுக்க வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருப்பது உங்களுக்கு தெரிந்ததுதான்.

இலங்கையில் தொடர்ந்து நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் தமிழர்கள் மனதை மிக ஆழமாக பாதித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா ஐ.நா. மனித உரிமை கழகத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். அதோடு அந்த தீர்மானத்தை பலப்படுத்தும் வகையில் தேவையான சுதந்திரமான திருத்தங்களை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் மீண்டும் முழுமையாக மறு குடியமர்த்தம் செய்யப்பட்டு அவர்கள் சிங்களர்களுக்கு இணையாக சம உரிமை பெற்று கண்ணியத்துடன் வாழும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று 8.6.2011 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததை 14.6.2011 அன்று உங்களுக்கு மனுவாக அளித்தேன். மேலும் அந்த தீர்மானம் பற்றி 25.6.2011 அன்று கடிதம் மூலமும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தேன்.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந்தேதி மற்றும் கடந்த ஆண்டு மார்ச் 6-ந்தேதி உங்களுக்கு கடிதம் எழுதி ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

தமிழக மக்களின் வலுவான மன உணர்வு, சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் என்னுடைய வேண்டுகோள்கள் காரணமாக கடந்த ஆண்டு ஐ.நா. சபையில் வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.

அந்த தீர்மானத்தின்படி போரில் கற்றுக் கொண்ட பாடங்கள் பரிந்துரையை இலங்கை அமல்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்த தீர்மானம் வலு இல்லாத ஒன்றாக இருந்தது. ஐ.நா. நிபுணர்கள் தெரிவித்த பல சரத்துக்கள் சேர்க்கப்படவில்லை. அந்த வகையில் இந்தியா தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது.

அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓர் ஆண்டாகியும் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இதை ஐ.நா. உரிமை கழகம் தெளிவு படுத்தி உள்ளது.

ஐ.நா. சபையில் மனித உரிமை கழகம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இலங்கை அரசானது இன்னமும் கற்றுக்கொண்ட பாடங்கள் பரிந்துரையில் பலவற்றை அமல்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் நீதி, மறு குடியமர்த்தம் ஆகியவற்றில் இலங்கை அரசு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு இலங்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இலங்கையில் இப்போதும் தமிழர்கள் வீடுகளை இழந்து வெளியில் உள்ளனர். அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

இந்த நிலையில் இலங்கை அரசு இனப்படுகொலை மற்றும் போர் குற்றம் நியாயமான விசாரணை நடத்த எந்த அறிகுறியும் இல்லை. தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. அவை வாபஸ் பெறப்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதுபோல தமிழர்கள் மறு குடியமர்த்தம் செய்யப் பட நம்பகமான கொள்கையும் இலங்கையிடம் இல்லை.

தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்கும் அவர்களை நல்லபடியாக வாழ வைக்க வேண்டும் என்ற ஆர்வம் தற்போது அங்குள்ள சிங்கள அரசிடம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு பிறகும் கூட தேவையான நடவடிக்கை அந்த அரசு எடுக்கவில்லை.

இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கமிஷனின் கூட்டம் இலங்கை அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் கூட உள்ளது. இலங்கை ராணுவம் செய்துள்ள அட்டூழியங்களை வெளிச்சம் போட்டு காட்ட இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும்.

அதுமட்டுமின்றி இலங்கை தமிழர்கள் சம உரிமை பெறவும், கண்ணியமாக வாழ்க்கை அமைத்து கொள்ளவும் தற்போது நடைபெற உள்ள ஐ.நா. கமிஷன் கூட்டம் ஒரு வாய்ப்பதாக அமைந்து உள்ளது.

ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்க இருப்பது முக்கியமானது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களிடமும் நிலவும் மன உணர்வை பிரதிபலிக்கவும், ஜனநாயகத்தில் இந்தியா உலகளாவிய தலைமை பண்புடன் இருப்பதை உறுதிப்படுத்தவும் ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்.

கடந்த சில தினங்களாக நீங்களும், வெளியுறவுத்துறை அமைச்சரும் வெளியிடும் தகவல்கள் திருப்திகரமாக இல்லை. இந்தியாவின் நிலை என்ன என்பதை உங்களது பேச்சுகள் தெளிவாக சுட்டிக்காட்டவில்லை.

குறிப்பாக இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமைகள் மீறல்கள் குறித்து உங்களிடம் தெளிவான தகவல் இல்லை. ஐ.நா. மனித உரிமை கழகத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் மீது விவாதம் நடக்க உள்ள நிலையில் தொடர்ந்து இந்த விஷயத்தில் இந்தியா மவுனம் சாதிப்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

இந்த விஷயத்தில் இந்தியா மிகவும் உறுதியான துணிச்சலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலையை எடுக்க வேண்டும். அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வெறுமென ஆதரித்தால் போதாது.

அந்த தீர்மானத்தில் தேவையான சரியான திருத்தங்கள் செய்து அந்த தீர்மானத்தை பலப்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் அந்த தீர்மானத்தை மிகவும் ஆற்றலுடன் அமல்படுத்த முடியும்.

- தீர்மானத்தில் கவலை என்று இருப்பதை மிகவும் ஆழ்ந்த கவலை என்று மாற்ற வேண்டும்.

- இலங்கை அரசு கடமையை நிறைவேற்ற தவறியதற்காக கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

- இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்கள் பற்றி சர்வதேச கோர்ட்டில் குற்றவாளியை நிறுத்தி சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். இந்த விசாரணையை ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். மேலும் 2014-ம் ஆண்டு நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 25-வது கூட்டத்தில் இதுபற்றி அறிக்கை தாக்கல் செய்து சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும்.

- இலங்கையில் சிங்களர்களுக்கு இணையாக தமிழர்கள் சம உரிமைகள் பெற சர்வதேச கழகம் ஒன்றை அமைக்க இலங்கையை சம்மதிக்க வைக்க வேண்டும்.

இவை அனைத்தும் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

ஐ.நா. சபையில் நாளை (19-ந்தேதி) அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளதால் தாங்கள் உடனடியாக இந்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்த தீர்மானத்தில் மேற்கண்ட திருத்தங்களை சேர்க்க அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் அமெரிக்க தீர்மானத்தை பலப்படுத்த முடியும்.

மேலும் இந்த தீர்மானத்தை வெற்றி பெற செய்ய மற்ற உறுப்பு நாடுகளிடம் இந்தியா ஆதரவு திரட்ட வேண்டும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில் இந்தியா துணிச்சலான நடவடிக்கை எடுத்து இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சமுதாயத்தை ஆதரிக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+