மத்திய அமைச்சர்கள் வந்தபோது சென்னை ஏர்போர்ட்டில் இருந்த மர்ம அட்டைப்பெட்டியால் பரபரப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்களின் கார்கள் நிறுத்தும் பகுதியில் மர்ம அட்டைப்பெட்டி ஒன்று இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகிவிடுவேன் என்று கூறிய திமுக தலைவர் கருணாநிதியை சமாதானம் செய்ய மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் மற்றும் ஏ.கே. அந்தோணி ஆகியோர் நேற்று மாலை சென்னை வந்தனர். அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய பிறகு முக்கிய பிரமுகர்கள், மத்திய அமைச்சர்களின் கார் நிறுத்தும் பகுதியில் மர்ம அட்டைப்பெட்டி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பெட்டியில் வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பெட்டியை சோதனை செய்ததில் அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை. மாறாக வெளிநாட்டு பிஸ்கட் பாக்கெட்டுகள் 10 இருந்தன. இதையடுத்து பிஸ்கட் பாக்கெட்டுகள் விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மத்திய அமைச்சர்களின் கார்களை நிறுத்தி வைக்கும் பகுதியில் யாராவது வேண்டும் என்றே அட்டைப் பெட்டியை வைத்தார்களா அல்லது பயணிகள் யாராவது அதை மறந்துவிட்டு சென்றார்களா என்று விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications