சட்டசபையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் ராஜ்யசபா தேர்தல் வாக்களிப்பார்களா?
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து 6 மாத காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழழகன், முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். அப்போது இதர தேமுதிக எம்.எல்.ஏக்கள் அவரை தாக்க முயன்றனர். இதைத் தடுக்க முயன்ற மற்றொரு தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தாக்குதலுக்குள்ளானார். இந்த விவகாரம் தொடர்பாக 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் நேற்று ஓராண்டு காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களது தண்டனைக் காலம் 6 மாத காலமாக இன்று குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த 6 மாத காலத்துக்குள் ராஜ்யசபா தேர்தல் முடிந்துவிடும்.

இதனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் மைத்துனர் சுதீஷை ராஜ்யசபா எம்.பியாக்குவதற்கான அவரது முயற்சியில் பெரும் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. ஏனெனில் எதிர்வரும் ராஜ்யசபா தேர்தலில் இந்த சஸ்பென்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 6 பேரும் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபையில் 6 தேமுதிக எம்.எல்.ஏக்களை சஸ்பென்ட் செய்யப்பட்டது பற்றிய தீர்மானத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க இருக்கிறார். அதன் பின்னர்தான் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கும் உரிமை 6 தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு உள்ளதா? இல்லையா? என தேர்தல் ஆணையம் அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
