அரசு ஆஸ்பத்திரி அவலம்: டெங்கு சிகிச்சைக்கு போய் ஹெச்ஐவி வாங்கி வந்த சிறுமியின் பரிதாபம்

கோழிக்கோடு அருகே உள்ள மானந்தவாடியை சேர்ந்தவர் பிஜூ (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) கூலி தொழிலாளியான இவரது 8 வயது மகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்தது.
இதனால் அந்த சிறுமியை கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பலவித சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறைந்தபாடில்லை. இதனால் அந்த சிறுமியின் ரத்தத்தை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த சிறுமிக்கு எய்ட்ஸ் நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது.
உடனே டாக்டர்கள் அந்த சிறுமியின் தாய்- தந்தை ஆகியோரின் ரத்தத்தையும் பரிசோதனை செய்து பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு எய்ட்ஸ் தாக்குதல் இல்லை. பின் எவ்வாறு அந்த சிறுமிக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியது? என்று புரியாமல் டாக்டர்கள் குழப்பம் அடைந்தனர்.
அதன்பிறகு சிறுமியின் பெற்றோரிடம் தீவிரமாக விசாரித்ததில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோழிக்கோடு தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கு சிறுமிக்கு ரத்தம் ஏற்றப்பட்டதாகவும் தெரிய வந்தது.
எனவே அங்கு அந்த சிறுமிக்கு ஏற்றப்பட்ட ரத்தம் மூலம் எய்ட்ஸ் நோய் பரவி இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். பொதுவாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு ரத்தம் ஏற்றும்போழுது, பரிசோதனை செய்த பிறகுதான் ஏற்றப்படும். பரிசோதனையில் ஏற்பட்ட கவனக்குறைவால் அந்த சிறுமிக்கு எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் ஏற்றப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
கேரள அரசாங்கம், சுகாதார சேவை மைய இயக்குனரை இதுகுறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களைச் சந்தித்த சுகாதார சேவைகள் கூடுதல் இயக்குனர், டாக்டர் ரமணி, ‘ ஹெச்.ஐ.வி நோய் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு, ‘நோய்த்தொற்று ஏற்பட்ட 20 முதல் 25 நாட்களுக்கு பிறகே, நோய்க்கான அறிகுறிகள் இரத்தத்தில் தெரியவரும். எனவே, இடைப்பட்ட காலத்தில் பரிசோதனையில் தவறிய இரத்தம் மூலம் சிறுமிக்கு ஹெச்.ஐ.வி நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம்' என விளக்கமளித்துள்ளார்.
கேரள சுகாதார அமைச்சர் வி.எஸ்.சிவக்குமார், ‘ இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறா வண்ணம் தக்க பாதுகாப்பு மேற்கொள்ளப்படும்' என தெரிவித்துள்ளார்.
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.சிவகுமார் ,'இந்த சம்பவம் சோகமானது. இனி இதுபோல் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications