பெண்ணையாற்றில் தடுப்பணை… கர்நாடகம் கட்டுவதை தடுக்கக் கோரி பிரதமருக்கு ஜெ. கடிதம்.

இதுகுறித்து புதன்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
நான் தங்களுக்கு கடந்த ஆண்டு மே 19 ஆம் தேதி ஏற்கெனவே ஒரு கடிதம் எழுதியிருந்தேன். ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாய்கின்ற நதியான பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகம் தன்னிச்சையாக தடுப்பணைகளையோ அல்லது நதியின் போக்கை திருப்பும் கட்டுமானங்களையோ மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். இதன் தொடர்ச்சியாக, இப்போது இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்.
கர்நாடகத்துக்கு உள்பட்ட முகலூர் என்ற பகுதியில் நதியின் போக்கை திருப்பும் கட்டுமானத்தை கர்நாடக அரசு கட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நதியின் போக்கை திருப்பும் கட்டுமானம், லக்கூர் ஏரியை நிரப்புவதற்கு உதவும். கால்வாய் வழியாக இவ்வாறு லக்கூர் ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. நீர்ப்பாசனத்துக்காக இந்த தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை பெண்ணையாற்றை நம்பி வேளாண்மை செய்யும் தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.
எனவே, இத்தகைய சூழ்நிலையில் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணையையோ அல்லது நதியின் போக்கை திருப்பும் கட்டுமானத்தையோ தமிழக அரசின் ஒப்புதல் இன்றி கர்நாடக அரசு கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக உங்களது உடனடியான ஆக்கப்பூர்வ பதிலை எதிர்பார்க்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications