காதலிக்க மறுத்த மாணவி.. ஆசிட் வீசுவதாக மிரட்டிய பாலிடெக்னிக் மாணவர் கைது
காரைக்கால்: காரைக்காலில் என்ஜினீயரிங் மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த பாலிடெக்னிக் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஆசிட் வீச்சிற்கு இரு உயிர்களை பலி கொடுத்துள்ள நிலையில், அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்துவரும் சூழ்நிலையிலும், ஆசிட் சம்பந்தமான மிரட்டல்கள் தொடரத்தான் செய்கின்றன.
மாகியை சேர்ந்தவர் சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகள் சர்மிளா (வயது 21 பெயர் மாற்றப் பட்டுள்ளது) இவர், காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் என்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறார்.
செருமாவிலங்கை, சித்ரா நகரை சேர்ந்த மோகன் (21) இவர், அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சர்மிளா, கல்லூரியிலிருந்து சற்று தொலைவில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.
அங்கிருந்து தினசரி கல்லூரிக்கு புறப்பட்டு வந்து செல்லும்போது, கடந்த 2 ஆண்டுகளாக மோகன் அவரை பின்தொடர்ந்து வந்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். ஆனால் சர்மிளா அதனை கண்டு கொள்ளவில்லை.
அவரது படிப்பு இன்னும் சில தினங்களில் நிறைவு பெற்று அவர் சொந்த ஊருக்கு செல்ல உள்ளார். இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியளவில் சர்மிளா வழக்கம்போல் விடுதியிலிருந்து புறப்பட்டு தனது வகுப்புத்தோழி ரேவதியுடன் கல்லூரிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது அவரை வழிமறித்த மோகன், ‘என்னை நீ காதலிக்காவிட்டால், முகத்தில் ஆசிட் வீசி விடுவேன்' என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை கேட்டதும் பயந்து போன சர்மிளா, இதுகுறித்து கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி வார்டன் ஆகியோரிடம் தெரிவித்தார்.
பின்னர் அவர்களது ஆலோசனையின்படி மோகன் மீது திருநள்ளாறு போலீசில் சர்மிளா புகார் செய்தார். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார், ஏட்டு பக்தவச்சலம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சர்மிளாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலிடெக்னிக் மாணவர் மோகனை கைது செய்தனர்.
மாணவர் மீது 314 (வழி மறித்தல்), 506(2) (கொலைமிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காரைக்கால் 2-ம் வகுப்பு குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications