இந்த ஆண்டு பருவமழை ஓரளவு நன்றாக இருக்கும்!- ஸ்கைமெட்

கடந்த ஆண்டு பருவமழை பெருமளவு பொய்த்துவிட்டது. குறிப்பாக தமிழகத்தில் இப்போதே வறட்சி தாண்டவமாடத் தொடங்கிவிட்டது. பல மாவட்டங்களில் மக்கள் குடிநீருக்காக அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந் நிலையில், இந்த ஆண்டாவது ஜூன் - செப்டம்பர், அக்டோபர் - டிசம்பர் பருவங்களில் போதிய மழை பொழியுமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து இன்னும் இந்திய வானிலை மையம் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அடுத்தவாரம் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக் கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அதற்கு முன்பாகவே, தனியார் வானிலை அமைப்பான ஸ்கைமெட் ஒரு வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் இந்த ஆண்டுக்கான பருவமழை உரிய நேரத்தில் தொடங்கும் என்றும், அது காரிப் பருவ பயிர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் புள்ளிவிவரங்களில் அடிப்படையில் இந்த அறிக்கையை ஸ்கைமெட் அறிவித்துள்ளது.
ஆனால் வரும் ஆகஸ்டில் மட்டும் எதிர்ப்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவு இருக்காது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
ஸ்கைமெட் சிஇஓ ஜடின் சிங் கூறுகையில், "இந்த ஆண்டு ஜூன், ஜூலையில் சராசரி மழைப் பொழிவு இருக்கும். ஆனால் ஆகஸ்டில் குறையும். செப்டம்பரில் ஓரளவு நல்ல மழை இருக்கும்," என்றார்.
சராசரியாக 96 சதவீதம் மழைப்பொழிவு இருக்கும் என்கிறது ஸ்கைமெட். கடந்த ஆண்டு 92 சதவீத அளவு மட்டுமே மழைப் பொழிவு இருந்தது. வானிலை ஆய்வாளர்களைப் பொருத்தவரையில் 2012 மோசமான ஆண்டாக அமைந்தது.
இந்த ஆண்டு அதை விட சற்றே சுமாராக இருக்கும் என்கிறார்கள்.
தென் பசிபிக் கடலின் தட்ப வெப்பம் இந்த முறை எந்த மாறுதலுமின்றி இருக்கும் என்பதால், சாதகமான மழைப்பொழிவு சாத்தியம் என்கிறது ஸ்கைமெட்.












Click it and Unblock the Notifications