திருப்பூர் அருகே 8 வயது சிறுமி பலாத்காரம்! நிவாரணம் கோரி உறவினர்கள் சாலை மறியல்!!
திருப்பூர்: திருப்பூர் கோயம்பாளையம் கணபதிநகரில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான 8 வயது சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரண உதவி கோரி உறவினர்களும் பொதுமக்களும் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 12-ந் தேதி கணபதி நகரைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞனால் 2-வது படித்துக் கொண்டிருந்த 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது .போலீசாரும் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி கோவை சிஎம்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அரசு செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த சிறுமியின் உறவினர்கள் வலியுறுத்தினர். இதனால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை அனுமதிக்க ஏற்பாடு செய்து வந்தார்.
இருப்பினும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும் சிறுமியின் குடும்பத்துக்கு தகுந்த நிவாரணம் அளிக்கக் கோரியும் கோயம்பாளையம் பொது மக்கள் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். மேலும் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications