மாநில அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கும் முறை மாற்றம் அரைவேக்காட்டுதனம்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

IAS issue: Jaya writes to PM
சென்னை: மாநில அரசு அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கும் புதிய முறைக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிரிப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

மாநில அரசு அதிகாரிகளுக்கு அகில இந்திய பணி அந்தஸ்து வழங்கும் முறையில் செய்ய திட்டமிடப்பட்டு உள்ள மாற்றத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், பொது தேர்வு பாடத்திட்டத்தை இறுதி செய்வதற்காக இன்று டெல்லியில் நடைபெறும் கூட்டம் தொடர்பாகவும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் (யு.பி.எஸ்.சி.) தமிழக அரசுக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்பேரில் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

அகில இந்தியப் பணி தேர்வு முறை உள்பட மத்திய, மாநில நிர்வாக உறவுகளை பாதிக்கக்கூடிய மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினை குறித்து தங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் இருந்து மாநில அரசுகளுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படாதது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது.

மாநில அரசு அதிகாரிகளுக்கு அகில இந்திய பணி அந்தஸ்து வழங்கும் முறை தொடர்பாக எடுக்கப்பட்டு உள்ள மாற்றத்திற்கு கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதையும், தன்னிச்சையான முடிவு எடுக்கப்பட்டிருப்பதையும் யு.பி.எஸ்.சி. தகவல் மூலம் தான் நாங்கள் அறிந்து கொண்டோம். 2-வது பணியாளர் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் இந்தப் புதிய முறை கொண்டு வரப்படுவதாக தெரிய வந்துள்ளது.

1954 அகில இந்திய பணிகள் நியமன விதிமுறைகளின்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 விதமாக நியமிக்கப்படுகிறார்கள். ஒன்று, போட்டித் தேர்வு மூலமாகவும், 2-வதாக மாநில குடிமைப் பணி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பதன் மூலமாகவும், 3-வதாக அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகளில் இருந்து தகுதியானவர்களைத் தேர்வு செய்வது மூலமாகவும் நியமிக்கப்படுகின்றனர்.

அதுபோல இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.), இந்திய வனப்பணி (ஐ.எப்.எஸ்.), அதிகாரிகளின் பணி நியமனத்தைப் பொருத்தமட்டில் அவர்கள் நேரடித்தேர்வு மூலமாகவும், மாநில போலீஸ் மற்றும் வனப்பணி அதிகாரிகள் பதவி உயர்வு மூலமாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனத்தில் பின்பற்றப்பட்டு வரும் மேற்கண்ட 3 விதமான விதிமுறைகள் பதவி உயர்வு அல்லது தேர்வு முறை பணிகளில் மாநில அரசுக்கு மிக முக்கிய பங்கை அளிக்கின்றது. கடந்த பல ஆண்டுகளாக இந்த நடைமுறையால் நாட்டிற்கும், தமிழ் மாநிலத்திற்கும் உரிய பலன் கிடைத்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.

மாநில அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மூலமாகவும், தேர்வு முறை மூலமாகவும் அகில இந்திய பணி அந்தஸ்து அளிக்கும் முறை சிறப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கு ஊக்கம் அளிப்பதாகவும், அவர்கள் மாநிலத்திற்கும், மக்களுக்கும் சிறப்பாக பணியாற்றவும் முடிகிறது. மேலும் மாநில அரசு அதிகாரிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் கடினமான போட்டித் தேர்வு மூலம் தான் தேர்வு செய்யப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த அதிகாரிகளுக்கு அகில இந்திய பணி அந்தஸ்து வழங்கும்போதும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், மாநில அரசு அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்க யு.பி.எஸ்.சி. மூலம் பொதுப் போட்டித் தேர்வு நடத்த வேண்டும் என்ற 2-வது பணியாளர் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் குறுகிய பார்வை கொண்ட பரிந்துரையை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. ஏராளமான பேர் போட்டியிடும்போது அவர்களின் திறமைகளை சோதிப்பதற்காக போட்டித் தேர்வு நடத்த வேண்டியது அவசியம்தான். ஆனால், அத்தகைய போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு அரசால் தொடர்ந்து திறமை மதிப்பீடு செய்யப்பட்டு வரும் அதிகாரிகளுக்கு இன்னும் ஓர் பொதுத்தேர்வு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத அர்த்தமற்ற முறையாகும்.

இந்த புதிய முறை, சிறப்பாகப் பணியாற்றும் மாநில அரசு அதிகாரிகளை ஊக்கம் இழக்க செய்யும். அவர்களுக்கு தேர்வு நடத்தினால், அவர்கள் அரசுப் பணியாற்றுவதைவிட அந்தத் தேர்வில்தான் அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்களின் அரசுப்பணி அனுபவம் மதிப்பற்றதாகிவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த முறை, தற்போது இருக்கின்ற பணிமூப்பையும், பல்வேறு அதிகாரமட்டங்களையும், மாநிலத்தின் இடஒதுக்கீட்டு முறையையும் தலைகீழாக மாற்றிவிடும்.

மேலும், மாநில அரசு அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து அளிப்பதற்கான உச்ச வயது வரம்பையும் 54-ல் இருந்து 40 ஆக குறைக்கலாம் என்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் மாநில அரசு அதிகாரிகளின் ஐ.ஏ.எஸ். கனவை நிர்மூலமாக்கும் பிற்போக்கான ஒரு பரிந்துரை. மாநில அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மூலமாகவோ அல்லது தேர்வு மூலமாகவோ ஐ.ஏ.எஸ். அந்தஸ்து அளிக்க நிர்ணயிக்கப்பட்டு உள்ள தற்போதைய வயது வரம்பே தொடர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்துகிறேன்.

காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு நல்ல செயல்முறையை தன்னிச்சையாக நாசப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு இது மற்றொரு உதாரணம் ஆகும். நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி தத்துவத்தை குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு வஞ்சனையான திட்டமாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்து அளிக்கப்பட்ட அதிகாரிகளின் தரம் ஒரே சீராக இல்லை என்று சொல்லி அதை சரிசெய்வதற்காக புதிய முறை கொண்டு வரப்படுவதாக கூறினால், அனைத்து மாநிலங்களையும் ஒன்றுபோல கருதி பொதுத்தேர்வு வைப்பதைக் காட்டிலும், தற்போதைய முறை சிறப்பாக செயல்படுத்தப்படும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் அனுபவத்தை ஆய்வு செய்திருக்க வேண்டும். அதோடு தேர்வு முறை, திறமை மதிப்பீடு, அதிகாரிகளுக்கான பயிற்சி ஆகிய முறைகளில் மாநிலங்களுக்கு ஏற்றாற்போல பயிற்சி முறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, இத்தகைய மதிகெட்ட, அரைவேக்காட்டுத்தனமான சீர்திருத்தங்களை நான் கடுமையாக எதிர்க்கிறேன். மாநில அரசு அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர உத்தேசித்திருப்பதற்கு கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தற்போதைய முறையே தொடர வேண்டும். உத்தேசிக்கப்பட்டு உள்ள பொதுத்தேர்வுக்கான தயாரிப்பு வேலைகளை தொடரக்கூடாது என்று யு.பி.எஸ்.சி.க்கு தாங்கள் உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+