100 நாள் வேலை திட்ட சம்பளம், இலவச லேப்டாப் கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடி: லேப்டாப் கேட்டு கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் 100நாள் வேலைவாய்ப்பு திட்ட சம்பளத்தினை முறையாக வழங்கக்கோரி கிராமமக்களும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தமிழகஅரசின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக லேப்-டாப் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் பி.காம் வணிகவியல் மற்றும் சாட்டிலைட் கோர்ஸ் இறுதியாண்டு மாணவ, மாணவியர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில், 'எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் எங்களைத்தவிர மற்ற பிரிவு மாணவர்களுக்கு அரசின் விலையில்லா லேப்டாப் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு மட்டும் லேப்டாப் தரவில்லை.
எனவே மற்ற மாணவர்களைப்போன்று எங்களுக்கும் அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கிடவேண்டும்' என இவ்வாறு அதில் கூறியுள்ளனர். வாரம்தோறும் அரசின் விலையில்லா லேப்டாப் கேட்டு பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்கதையாக அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கிராமங்களில் வேலையில்லாதவர்கள் பயன்பெறும் வகையில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பஞ்சாயத்து அலுவலகங்கள் மூலமாக சம்பளம் வழங்கப்பட்டது. இதில் சரியான முறையில் சம்பளம் வழங்குவதில்லை, சம்பளம் வழங்குபவர்களுக்கு கமிஷன் கொடுக்கவேண்டியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத்தொடர்ந்து இத்திட்டத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு வங்கிகள் மூலமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இதிலும் குறைந்த அளவே கூலி வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கொம்பாடிதளவாய்புரம், கைலாசபுரம், புளியமரத்து அரசரடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் கூறியருப்பதாவது, '100வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்து வரும் எங்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படுவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரியாக சம்பளம் வழங்கப்படுகிறது.
வங்கிகளுக்கு சென்று சம்பளம் குறித்து கேட்டால் உங்கள் கணக்கில் பணம் ஏறவில்லை என்கிறார்கள். பஞ்சாயத்தில் கேட்டால் வங்கியில் கேளுங்கள் என்று சொல்லி அலைக்கழிக்கிறார்கள். இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே எங்களுக்கு சம்பளத்தினை முறையாக ஒரேமாதிரியாக வேறுபாடு இன்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும்' என இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications