சென்னையில் வாலிபர் கொலை: உடலை ஆட்டோவில் இருந்து போலீஸ் குடியிருப்பு அருகே வீசிய கும்பல்
சென்னை: சென்னை புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பு அருகே வேன் டிரைவர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கொலைக் கும்பல் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசிவிட்டுச் சென்றது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த வேன் டிரைவர் ரமேஷ் (32). நேற்று முன்தினம் இரவு ரமேஷ், புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பு அருகே, எல்.ஜி.ரோட்டில் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவரது மூக்கில் இருந்தும் ரத்தம் வடிந்தது.
இதையறிந்த எழும்பூர் போலீஸார் அங்கு சென்று விசாரித்தபோது, ரமேசை சிலர் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசியதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற அவர் கொலைக் கும்பலிடம் எப்படி மாட்டினார் என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
கொலை செய்த பிறகு உடலை ஆட்டோவில் கொண்டு வந்து வீசினார்களா அல்லது ஆட்டோவில் வைத்தே கொன்றார்களா என்பது தெரியவில்லை.
இவரது உடல் பிரேத பரிசோதனை அரசு பொது மருத்துவமனையில் நடந்தது. இதன் முடிவு தெரிந்தபிறகே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியும்.
ரமேஷுக்கு லூர்துமேரி என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த வழக்குக் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications