மத்தியில் 4 ஆண்டுகள் நிறைவு: கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து கொடுக்கும் சோனியா
டெல்லி: மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி ஏற்று 4 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, வரும் 22-ந்தேதி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சோனியா காந்தி விருந்தளிக்கிறார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் 2-வது முறையாக ஆட்சி பொறுப்பு ஏற்று 4 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தனது 4 ஆண்டு கால ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்ற இருக்கிறார். இந்த கூட்டம் 2-ம் கட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதி ஆண்டு சாதனை விளக்க பட்டியலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 22-ந்தேதி நடைபெற உள்ள இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மற்ற கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார்.

ஆக்கப்பூர்வமான சாதனை அறிக்கை..?
ஊழல் புகார்கள், பவன்குமார் பன்சால், அஸ்வினிகுமார் ஆகிய இரு மத்திய கேபினட் மந்திரிகளின் பதவி விலகல் போன்ற அதிருப்தி காரணங்களால், ஆக்கப்பூர்வமான ஒரு சாதனை அறிக்கையை வெளியிடுவது பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அவ்வளவு எளிதான காரியமாக அமையுமா என்பது கேள்விக்குறியே.

முதலிடம் வகிக்கும்...
பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் மானியங்கள் மக்களை நேரடியாக போய் சேர வகை செய்யும் ‘உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம், சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடுக்கு அனுமதி போன்ற திட்டங்கள் சாதனைப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் என்று தெரிகிறது.

புதிய அறிவிப்புகள்...
தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி மிகவும் நம்பியிருந்த உணவு பாதுகாப்பு சட்ட மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் மன்மோகன்சிங் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து வேறுபாடு....
இரு மத்திய மந்திரிகள் பதவி விலகல் பிரச்சினையில் சோனியாவுக்கும், பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஆனாலும் காங்கிரஸ் தரப்பில் இது மறுக்கப் பட்டது. இந்த விருந்து நிகழ்ச்சி மூலம், பிரதமர் மன்மோகன்சிங் தனது ஆதரவை உறுதிப்படுத்துவார் என்றும் கருதப்படுகிறது.

எதிர்கட்சிகளின் தாக்குதல்...
அதே நேரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2-ம் கட்ட அரசு, சுதந்திர இந்தியாவில் மிகவும் பலவீனமான அரசு என்றும் அனைத்து துறையிலும் தோல்வியை தழுவிய அரசு என்றும் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளான பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, லோக்பால் மசோதா, நீதித்துறை பொறுப்புடமை சட்ட மசோதா போன்றவை நிறைவேற்றப்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் டி.ராஜா ஆகியோர் குற்றம் சாட்டினார்கள்.
அரசியல் அமைப்பு அதிகாரம் கொண்ட அமைப்புகளை அழித்து வருவதாகவும், சி.பி.ஐ.யை சீர்குலைத்து வருவதாகவும், நீதித்துறை நடவடிக்கைகளிலும் தடங்கலை ஏற்படுத்தி வருவதாகவும் மத்திய அரசு மீது பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது.

நம்பிக்கை நட்சத்திரங்கள்...
சவால்கள் அதிகம் இருந்தபோதிலும் மணிசங்கர் அய்யர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அடுத்த தேர்தலை அச்சம் இன்றி எதிர்கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். சுதந்திர இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமாக இருப்பதுதான் நமக்கு சாதகமான அம்சம் என்று கூறிய மணிசங்கர் அய்யர், முதலில் உத்தரகாண்ட், பின்னர் இமாசலபிரதேசம், தற்போது கர்நாடக மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வீழ்த்தப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி, பிளவுபட்ட எதிர்க்கட்சிகளால் தேர்தலில் நாம் பயப்பட தேவையில்லை என்று கூறி இருக்கிறார்.

விருந்தில் பங்கேற்பது சந்தேகமே...
இரு முக்கிய கூட்டணி கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. ஆகியவை கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதால், அந்த கட்சி தலைவர்கள் இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications