ஐபிஎல் சூதாட்டம்: சென்னை நட்சத்திர ஓட்டல் அதிபர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

ஐபிஎல் சூதாட்டத்தில் பல பெருந்தலைகள் இந்த முறை மாட்டின.. மாட்டி வருகின்றன. தொடர்ந்து நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பலர் மீதும் போலீஸின் பார்வை திரும்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னையில் உள்ள ரேடிசன் ப்ளூ நட்சத்திர ஓட்டலின் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு (வயது 51) மும்பை போலீசார் மற்றும் சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். அதைத்தொடர்ந்து முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்ரம் அகர்வால் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி சி.டி.செல்வம் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. விக்ரம் அகர்வால் தரப்பில் மூத்த வக்கீல்கள் வி.டி.கோபாலன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வக்கீல் அபுடுகுமார் ஆஜரானார்கள்.
தமிழக அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, தலைமை குற்றவியல் வக்கீல் சண்முகவேலாயுதம் ஆஜரானார்கள்.
அப்போது நடந்த விவாதம்:
ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்: மனுதாரர் ஒரு சூதாட்டக்காரர் (புக்கி) அல்ல. 'புக்கி' என்பவர்கள், சூதாட்டத்தை நடத்தி பணத்தை வாங்குபவர்கள். ஆனால், மனுதாரர் சூதாட்டத்தில் பணம் கட்டியவர்தான் (பண்டர்). இந்த குற்றச்சாட்டும், இதற்கான தண்டனையும் மிகச் சாதாரணமானது. எனவே, முன்ஜாமீன் பெற அவர் தகுதியுள்ளவர்.
இந்த வழக்கில் 23-ந்தேதி சம்மன் அனுப்பிய போலீசார், 30-ந்தேதி ஆஜராகலாம் என்று கூறியுள்ளனர். இதிலிருந்தே அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் அவர் மீது இல்லை என்பது தெரிய வரும். மனுதாரர் மீது இ.பி.கோ. 420-ம் பிரிவின் கீழ் (மோசடி) கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எந்த ஆதரமும் இல்லை. மனுதாரரை விசாரித்தால் ஆதாரங்கள் கிடைக்கலாம் என்று போலீசார் கூறுவதை ஏற்க முடியாது.
நீதிபதி: சம்மன் அனுப்பிய இடைக்காலத்தில் ஆதாரங்கள் கிடைத்தால் அவரை கைது செய்யலாமே.
ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்: இந்த சூதாட்டத்தில் பணம் கட்டி பணத்தை மனுதாரர் இழந்திருக்கிறார். மனுதாரர் யாரையும் ஏமாற்றவில்லை. குதிரை பந்தயத்தில், எந்தக் குதிரை ஜெயிக்கும் என்று பணம் கட்டுவதைப் போன்றதுதான் இதுவும். அதை சுப்ரீம் கோர்ட்டு, திறமையின் அடிப்படையிலான ஆட்டம் என்று கருத்து கூறியுள்ளது.
அட்வகேட் ஜெனரல்: இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை. பல்வேறு மாநிலங்களுக்கு இடையே இந்த குற்றம் நடைபெற்றுள்ளது. இந்த அணிதான் ஜெயிக்கும் என்று பொது மக்களிடம் தவறான வாக்குறுதியை கொடுத்துவிட்டு, அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.
அவர்கள் கூறும் அணி தோற்றுவிடும் என்று தெரிந்தும், அதை ஜெயிப்பதாக காட்டி சூதாட்டத்தில் பணத்தை கட்ட வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் தவறான சம்பாத்தியம், மற்றவர்களுக்கு இழப்பை ஏற்படுத்துதல் ஆகிய குற்றங்கள் நடந்துள்ளன. மோசடி குற்றச்சாட்டு சாதாரணமானது அல்ல. அதற்கு முன்ஜாமீனை அளிக்க முடியாது. தலைமறைவாக இருக்கும் மனுதாரரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே சமுதாயத்தில் செல்வாக்கும், பண பலமும் பெற்றவர்கள். நாட்டின் கவுரவம் இந்த வழக்கில் அடங்கியுள்ளது. மக்கள் நலனும், கிரிக்கெட் ரசிகர்களின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, விக்ரம் அகர்வாலுக்கு முன்ஜாமீன் அளிக்க கூடாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிட்டி என்பவரின் உதவியாளர் வினோத்குமாரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அனைத்து மனுக்களையும் விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், "மனுதாரர்களின் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை கருத்தில் கொள்ளும்போது, மாநில அளவில் தாக்கம் ஏற்படுத்தி இருப்பது தெரியவருகிறது. மேலும், போலீசாரின் பதில்மனுவை படித்து பார்க்கும்போது, அந்த குற்றத்தில் மனுதாரர் பங்கேற்றிருக்கிறார் என்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரிகிறது.
எனவே, வழக்கின் இந்த சூழ்நிலையில் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன," என்று தீர்ப்பளித்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விக்ரம் அகர்வாலுக்கு மும்பை போலீசாரும் சம்மன் அனுப்பி உள்ளனற். அந்த சம்மன் தொடர்பாக இடைக்கால முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்ரம் அகர்வால் இன்னொரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையை ஜூன் 3-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications