லண்டனில் ஸ்கெட்ச்.. சென்னையில் கடத்தல்.. கடலூரில் பேரம்- தப்பிய இலங்கை தம்பதி! சிக்கிய 8 பேர்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ2.5 கோடி கேட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து சினிமா பாணியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை தம்பதியினரை போலீசார் மீட்டுள்ளனர். இக்கடத்தல் தொடர்பாக பெண் தாதாவாக செயல்பட்ட தலைமை ஆசிரியை உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்தவர் 59 வயதான கணபதி பிள்ளை தவராஜா. அவரது மனைவி சலஜா. இங்கிலாந்தில் வசித்து வரும் இவர்களுக்கு அங்கு பெட்ரோல் பங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். இவருக்கு தர்ஷினி என்ற மகள் உள்ளார்.

நடந்தது என்ன?

கடந்த மாதம் 25-ந் தேதி லண்டனில் இருந்து தவராஜா இலங்கைக்கு சென்றார். பின்னர் தமிழகத்தை சுற்றிப் பார்க்க 29-ந் தேதி மனைவியுடன் கணபதி பிள்ளை தவராஜா சென்னை வந்தார். ஆனால் அவர்கள் திட்டமிட்டிருந்தபடி தியாகராயர் நகர் ஹோட்டலுக்கு அவர்கள் செல்லவில்லை. இதனால் அவர்கள் எங்கே போனார்கள் என்ற மர்மம் நீடித்து வந்தது. இந்நிலையில் லண்டனில் உள்ள கணபதி பிள்ளையின் மகள் தர்ஷினிக்கு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அதில் அவரது பெற்றோரை கடத்தி வைத்திருப்பதாகவும் நாங்கள் சொல்லும் இங்கிலாந்து நபரிடம் 3 லட்சம் பவுண்டு அதாவது இந்திய மதிப்பில் ரூ2.48 கோடி கொடுத்தால் அவர்களை விடுவிப்போம் என்றும் ஒரு பெண் தாதா போல மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து லண்டன் போலீசில் தர்ஷினி புகார் கொடுத்தார். லண்டன் போலீசார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர்.

திருச்சியில் சிக்கிய கடத்தல் கும்பல்

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கணபதிபிள்ளையின் லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஈழத் தமிழரான அஜந்தன் என்பவர்தான் இந்த கடத்தலுக்கு ஸ்கெட்ச் போட்டு தமது திருச்சி நண்பர் ரமேஷ் மூலம் அரங்கேற்றியிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ரமேசின் நண்பர் கண்ணன், பெண் தாதா போல் மிரட்டிய தலைமை ஆசிரியை இந்திரா அந்தோணி மேரி, மதியழகன், பிரபு, சரவணன், சதீஷ்குமார், வசந்த், இளங்கோ ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

கடலூர் மஞ்சக் குப்பத்தில் பேரம்

இது தொடர்பாக கமிஷனர் ஜார்ஜ், கணபதி பிள்ளை தவராஜாவும், அவர் மனைவி சலஜாவும் சென்னையில் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் நாங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினோம். அதன் பலனாக திருச்சியில் 8 பேரை கைது செய்தோம். அவர்கள் தவராஜாவை கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து துன் புறுத்தியுள்ளனர். அங்கிருந்தபடியே போனில் தர்ஷினியிடம் தொடர்ந்து பேசி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். போன் அழைப்புகளை வைத்து தவராஜாவும், அவர் மனைவியும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தோம். பின்னர் தனிப்படை போலீசார் மஞ்சக்குப்பம் சென்று அவர்களை ஒரு வீட்டில் இருந்து மீட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த சத்யா என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறோம் என்றார்.

லண்டனில் ஸ்கெட்ச்

இந்த வழக்கில் லண்டனில் உள்ள அஜந்தனும், ரமேசும் கைது செய்யப்பட்டனர். கடத்தல்காரர்களிடம் இருந்து 2 கார்கள், ஒரு ஜீப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்தபடி அஜந்தன் இ-மெயில் மூலம் தவராஜா, சலஜா போட்டோவை கண்ணனுக்கு அனுப்பினார். தவராஜா சென்னை வரும் நேரம் உள்ளிட்ட தகவல்களையும் கூறி இருந்தார். இதை வைத்தே கடத்தல் கும்பல் சினிமா பாணியில் இருவரையும் கடத்தியிருக்கிறது.

கடத்தப்பட்டது எப்படி?

தாங்கள் கடத்தப்பட்டது குறித்து சலஜா அழுதபடியே கூறுகையில், கடந்த புதன்கிழமை சென்னை விமான நிலையத்தில் வந்து நாங்கள் இறங்கினோம். தி.நகரில் நாங்கள் தங்க ஹோட்டல் அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த ஹோட்டல் பெயர் பலகையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். எங்கள் பெயரும் அதில் இருந்தது. எனவே அவர் ஹோட்டல் ஊழியர்தான் என்று நினைத்து அவருடன் சென்று காரில் ஏறினோம். சிறிது தூரம் சென்றதும் மேலும் 3 பேர் வந்து நாங்கள் சென்ற காரில் ஏறினார்கள். அதே நேரத்தில் கார் தி.நகருக்கு செல்லாமல் வேறு எங்கோ சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள் டிரைவரிடம் கேட்டோம். அதற்கு அவர் தி.நகரில் சாலை பணிகள் நடப்பதால் வேறு வழியாக அழைத்து செல்கிறோம் என்றார்.

சிறிது நேரத்தில் கார் புறநகருக்கு சென்று விட்டது. இதனால் எங்களுக்கு சந்தேகம் அதிகரித்தது. உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று நினைத்தபோது எங்களை அடித்து உதைத்தனர். எங்களிடம் இருந்த செல்போனையும் பறித்துக் கொண்டனர். ஒருநாள் முழுவதும் காரில் வைத்தே எங்களை எங்கெங்கோ அழைத்து சென்றனர். மறுநாள் எங்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். அப்போது கத்திமுனையில் நான் அணிந்திருந்த தாலிச் செயின், கம்மல் உள்ளிட்ட நகைகளை பறித்து கொண்டனர். இதையெல்லாம் பார்த்தபோது நாங்கள் உயிருடன் திரும்புவோமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. நல்ல வேளையாக சென்னை போலீசார் சிறப்பாக செயல்பட்டு எங்களை மீட்டு விட்டனர். போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர் அவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+