குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின்

மதுரையில் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை சென்ற மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விமானநிலையத்தின் வாசலில் செண்டை மேளம் முழங்க, கரகாட்டம், ஆடியும், வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைப்பார்த்து உற்சாகமடைந்த மு.க. ஸ்டாலின் தொண்டர்கள் கொடுத்த பொன்னாடைகளை புன்முறுவலுடன் பெற்றுக் கொண்டார். பிறந்தநாள் விழா என்னவோ தந்தை கருணாநிதிக்குத்தான் என்றாலும் அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த மு.க.ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தினர் திமுகவினர்.
பிறந்தநாள், நிதியளிப்பு கூட்டம்:
இதனைத் தொடர்ந்து மதுரை அய்யர் பங்களாவில் புறநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்றிரவு கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். புறநகர் மாவட்டத்தில் ஒன்றிய, நகர் நிர்வாகிகளோடு பெரும் தொண்டர் கூட்டமும் திரண்டு வந்ததால், கூட்டம் பிரமாண்டமாக இருந்தது.
வழக்குக்கு அஞ்சமாட்டோம்
விழாவில் பேசிய ஸ்டாலின் முதல்வர் ஜெயலலிதாவின் குட்டிக் கதைகளைப் பற்றி ஒரு பிடி பிடித்தார். ஸ்ரீரங்கம் விழாவில் ஜெயலலிதா குட்டிக்கதை சொன்னதைப் பற்றி கூறிய ஸ்டாலின், "அரசியல் ரீதியாக என்ன விமர்சனம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் தலைவர் அவர்களைக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி, அசிங்கமாக ஒரு குட்டிக்கதையைச் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.
கழுதை புத்தி குட்டிக்கதையை குட்டிகள் தான் சொல்லும். எனவே அவர் குட்டிக்கதை சொல்வதில் ஆச்சரியமில்லை. கழுதை புத்திக்குத் தான் கழுதை கதை தெரியும். நான் சொல்லவில்லை. இங்கு யாரோ சொன்னாங்க. இல்லைன்னா இதுக்கு ஒரு வழக்குப் போடுவாங்க. அதுக்கு எல்லாம் கவலைப்படுகிற ஆள் நான் இல்லை. வழக்கைப் பார்த்து, உங்க மிரட்டலைப் பயப்படுகிற ஆட்கள் நாங்க இல்லை. இது பனங்காட்டு நரி சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது" என்றார்.
சேது சமுத்திர திட்டம்
"சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது இத்திட்டம் பயனற்றது என கூறி, நாடகம் ஆடுகிறது.
அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தேன் எனக் கூறிய வைகோ, தா.பாண்டியன் போன்றோர் கூட தேர்தல் கூட்டணியை மனதில் வைத்துக் கொண்டு வாய் திறக்க மறுக்கிறார்கள்.
இரண்டாண்டு சாதனை
2012 முதல் தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது என, நிதிநிலை அறிக்கையில் அ.தி.மு.க. குறிப்பிட்டது. ஆனால், இன்னும் பல மணிநேரம் மின் வெட்டு நீடிக்கிறது. இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பந்தாடியது தான் அ.தி.மு.க.வின் இரண்டு ஆண்டு கால சாதனை.
சசிகலா கணவர் நடராஜன், நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த அவர், ஒரு வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "ஜெயலலிதாவை நான்தான் முதல்வர் நாற்காலியில் முதன்முதலில் அமர வைத்தேன். என்னால்தான் இரட்டை இலை சின்னம் கிடைத்தது. 1991-ல், தி.மு.க., ஆட்சியும் என்னால் தான் கலைக்கப்பட்டது" என்று பகிரங்கமாக கூறியதற்கு, ஜெயலலிதா பதில் சொல்வாரா" என்று கேட்டார்.
ரூ. 2.34 கோடி தேர்தல் நிதி
கூட்டத்தில், மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் 234 சட்டசபைத் தொகுதிகளைக் குறிக்கும் வகையில், 234 லட்சம் தேர்தல் நிதியை ஸ்டாலினிடம் கொடுத்தார் மூர்த்தி. இதைக் கண்டு உற்சாகமடைந்த ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் மூர்த்தியை பாராட்டினார். நன்றியும் சொன்னார். மதுரையில் இருந்து கொண்டே கூட்டத்தை புறக்கணித்த மு.க.அழகிரியைப் பற்றி ஸ்டாலினும் அவரது கோஷ்டியினரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.












Click it and Unblock the Notifications