டெய்லி ஓசி சாப்பாடு தரணும் - அடாவடி செய்த போலீஸ்காரர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
சென்னை: சென்னையில் தினசரி தங்களது காவல் நிலையத்துக்கு காசு வாங்காமல் சாப்பாடு தர வேண்டும் என்று கூறி மிரட்டி வந்த போலீஸாருக்கு மாநில மனித உரிமை ஆணையம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர்களான தர்மராஜ், மணி, ஷண்முகம், சேதுராமன் ஆகியோர் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:
மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் (சஸ்பெண்ட் ஆகி விட்டார்), முன்னாள் தலைமை காவலர் வி. திருவேங்கடம் ஆகியோர் எங்கள் ஓட்டலில் 2002-ம் ஆண்டிலிருந்து கடனுக்கு சாப்பாடு வாங்கி சென்றனர். கடன் தொகையை கேட்டபோது தர மறுத்தனர்.
அத்துடன் தினந்தோறும் மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த 4 போலீஸ்காரர்களுக்கு காசு வாங்காமல் இலவசமாக காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு சாப்பாடு ஆகியவை தர வேண்டும் என்று கேட்டனர்.
இதற்கு மறுத்ததால் எங்கள் ஓட்டல் ஊழியர்கள் 2 பேரை அடித்து அவர்கள் மீது போலீசார் பொய் கேஸ் போட்டனர் என்று தெரிவித்திருந்திருந்தனர்.
இதுகுறித்து ஆணையத் தலைவர் பாஸ்கரன் விசாரணை நடத்தினார். பின்னர் சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதை தமிழக அரசே வழங்க வேண்டும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட போலீஸாரின் சம்பளத்திலிருந்து அதை பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் பாஸ்கரன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications