இது என்ன வாய்க்கால் பிரச்சினையா... கருணாநிதி ஆதங்கம்

சென்னையில் நேற்று நடந்த திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி உணர்ச்சி ததும்ப பேசியுள்ளார்.அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்...
நிர்வாக குழு கூட்ட தீர்மானங்களில் மிக முக்கியமாக நாட்டுப் பிரச்சினை, மக்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை குறித்து எழுதப்பட்டிருக்கின்றன, வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த தீர்மானங்களில் மிக முக்கியமானது, சேதுக் கடல் பிரச்சனையாகும்.
நான் ஏன் இதை சேதுக் கடல் என்று சொன்னேன் என்றால், நம்முடைய நண்பர்கள் சிலர் இதை சேதுக் கால்வாய் என்று கூறியதன் காரணத்தால், நமக்கே இது சிறு கால்வாய் பிரச்சனை போலும், இந்தக் கால்வாய் பிரச்சனையை ஏன் கட்டிக் கொண்டு அழுகிறார்கள் என்று நினைக்கத் தோன்றும். இது வெறும் கால்வாய் பிரச்சனை அல்ல, வாய்க்கால் பிரச்சனை அல்ல, இது நம்முடைய வாழ்வாதாரப் பிரச்சனை. வருங்கால தமிழகத்தினுடைய பிரச்சனை.
இதுபற்றி கவலைப்படாமல் இருந்து விட்டால், கால்வாய் தானே, வாய்க்கால் தானே என்று அலட்சியப்படுத்திவிட்டால், இது பெரிய சமுத்திரப் பிரச்சனை என்பதை கோடிட்டுக் காட்ட வேண்டிய அவசியம் எனக்கு ஏன் ஏற்பட்டிருக்கிறதென்றால், நம்முடைய அண்ணா, தன்னுடைய வாழ்நாளில் கண்ட கனவுகளில் ஒன்றாக கருதியது. கடைசி வரையிலே நிறைவேறும் என்று எதிர்பார்த்தது. அதற்காக வாதாடியது, போராடியதெல்லாம் இந்த சேது சமுத்திரத் திட்டத்திற்காகத் தான்.
தி.மு.க. ஏதோ இந்த ஆட்சிக்கு எதிராக போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதற்காக அல்ல. இது நம்மையே வருத்திக் கொள்கிற ஒரு பிரச்சனை. நம்முடைய எதிர்காலத்தை அழிக்கின்ற ஒரு பிரச்சனை. நம்முடைய எதிர்காலத்தில் வருகின்ற சந்ததியினருக்கு, நம்முடைய குழந்தை குட்டிகளுக்கு, பேரன் பேத்திகளுக்கு, அவர்களுடைய வாழ்வாதாரங்களுக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டு விடக் கூடும் என்பதற்காகத் தான் இந்த நிலை.
எதிர்காலத் தமிழகம் இருண்ட நாடாக ஆகிவிடாமல் இருக்க, பொருளாதாரத்திலே பொலிவு பெற்ற நாடாக இருக்க, வளங்களிலே எந்த நாட்டிற்கும் வளையாத, நிமிர்ந்த நாடாக விளங்க இது போன்ற திட்டங்கள் தேவை. அந்தத் திட்டங்களை வேண்டாமென்று சொல்வதே, அந்தத் திட்டத்தை அழிக்க நினைப்பது யாராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்தவர்களாக ஆகமாட்டார்கள்.
தீமை செய்தவர்களாகத் தான் ஆவார்கள். எனவே அந்தப் பழிக்கு அவர்கள் ஆளாக வேண்டாம். போராட்டத்திற்கு முதல் கட்டம் எது, இரண்டாவது கட்டம் எது என்பதையெல்லாம் அவ்வப்போது தீர்மானித்து பத்திரிகைகள் வாயிலாக உங்களுக்குத் தெரிவிப்பேன்.
கடைசி கட்டமாக, நம்முடைய உயிரையே இழக்கத் தயார் என்றாலும், அதற்கும் நாம் தயார் என்ற அளவிலே இந்தப் போராட்டத்திலே வெற்றியைக் குவிப்போம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications