உத்தரகாண்ட்டில் வாட்டர்பாட்டில் ரூ150...ஒரு கப் சோறு ரூ500, ஒரு ரொட்டி ரூ180!
டேராடூன்: வெள்ளப் பெருக்கு காரணமாக பல சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் பசியால் வாடி, உயிருக்கு போராடி வரும் வேளையில் உணவின் விலையைப் பலமடக்கு உயர்த்தி லாபம் பார்க்கத் தொடங்கியுள்ளனர் உத்தரகாண்ட் ஹோட்டல் உரிமையாளர்கள்.
இயற்கையின் சீற்றத்தால் திக்குமுக்காடிப் போயுள்ளது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிர யாகை, உத்தரகாசி, சமோலி ஆகிய மாவட்டங்கள். எனவே, அங்குள்ள மக்களுக்கு கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தத் தொடங்கியுள்ளனர் அங்குள்ள ஹோட்டல்காரர்கள்.
விலையைப் பல மடங்கு உயர்த்தி, கிடைத்தவரை லாபம் என்ற நோக்கில் வியாபாரம் செய்கிறார்களாம் அவர்கள்.

ஒரு கப் சாதம் ரூபாய் 500...
ருத்ரபிரயாகை மாவட்டத்தில் ஹேம்குந்த் சாகிப் பகுதியில் சிலர் தற்காலிக ஓட்டல்களை திறந்துள்ளனர். அவர்கள் ஒரு கப் சோற்றை 500 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்களாம்.

சப்பாத்தி 180 ரூபாயாம்...
சப்பாத்தி ஒன்று ரூபாய் 180க்கு விற்கப்படுகிறதாம். புனிதப்பயணம் சென்ற வெளி மாநிலத்தார் வேறு வழியின்றி, அதிக விலை கொடுத்து அத்தகைய கடைகளில் உணவு வாங்கி உண்டு உயிர் வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மனசாட்சியே இல்லையா..?
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ருத்ரபிரயாகை மாவட்டத்தில் உள்ள குருத்வாராவுக்கு வழிபாடு செய்ய சென்ற ஒரு குழுவினர் 5 நாட்களாக பட்டினி கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். பணத்தட்டுபாட்டினால் அவர்கள் பட்டினி கிடந்தது தெரிய வந்துள்ளது. மயங்கி விழுந்தவர்களைப் பார்த்து கூட ஹோட்டல்காரர்கள் மனமிறங்கவில்லை என பாதிக்கப் பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆற்றில் வெள்ளம்... ஒரு பாட்டில் நீர் ரூ150
வெள்ளத்தால் ஊர் அழிந்த நிலையில் நல்ல குடிநீர் ஒரு பாட்டில் ரூ 150க்கு விற்கப்படுகிறதாம். கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை கிட்டத்தட்ட ரூ 7500 ரூபாயாம்.

இப்போ நிலைமை தேவலை...
ஆனால், தற்போது ராணுவத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை தொடர்ந்து வழங்கி வருவதால் மோசமான நிலைமை மாறி வருவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications
