27ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. கோட்டையில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்!
சென்னை: தமிழகத்தில் வரும் 27-ந் தேதி ராஜ்யசபா தேர்தல் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜ்யசபா தேர்தலில் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுகின்றனர். இதில் அதிமுக அணியின் 5 வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது. 6வது எம்.பி. இடத்துக்கு திமுக வேட்பாளர் கனிமொழியும் தேமுதிகவின் இளங்கோவனுக்கும் இடையே போட்டி உள்ளது. இதனால் 27-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
வாக்குச் சீட்டு, வாக்குப் பெட்டி
27-ந் தேத் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன. அதற்காக 234 வாக்குச் சீட்டுகளுடன் சற்று கூடுதல் எண்ணிக்கையில் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு உள்ளன. அதுபோல வாக்குப்பெட்டியும் தயாராகிவிட்டது. இந்த வாக்குப் பெட்டி பழுதடைந்துவிட்டால் மாற்றாக மற்றொரு வாக்குப்பெட்டியும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குப் பதிவுக்காக சென்னை தலைமை செயலக கட்டிடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள சட்டசபை குழுக்கள் கூடும் அறை, வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த அறையில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க இடம் தனியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
எப்படி வாக்களிப்பது?
வாக்குப் பதிவு நாளான 27-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை எந்த நேரத்திலும் வந்து எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம். வாக்குச்சீட்டில் வேட்பாளர்கள் 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த பெயர்களுக்கு எதிரே உள்ள காலியிடத்தில் 1, 2 என்று எண்ணை எழுதி எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பர். அதாவது முதல் முன்னுரிமை, 2-வது முன்னுரிமை, 3-வது முன்னுரிமை என்று 7 பேருக்கும் முன்னுரிமை அடிப்படையில் வாக்களிக்கலாம். குறைந்தபட்சம் முதல் முன்னுரிமை வாக்கு ஒன்றை போட்டாக வேண்டும். இல்லாவிட்டால் அந்த வாக்கு செல்லாததாகிவிடும்.
வாக்கு எண்ணிக்கை
27-ந் தேதி மாலை மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிந்து இரவு 7 மணிக்கு முன்னதாகவே முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். வாக்கு எண்ணிக்கையின் போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications