இலங்கைக்கு ராணுவ பயிற்சி.. இந்தியாவை அந்நிய நாடாக கருத நேரிடும்: வைகோ எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

குன்னூர்: இலங்கை ராணுவத்துக்கு தொடர்ந்தும் பயிற்சி அளிக்குமேயானால் இந்தியாவை நாங்கள் அந்நிய நாடாகவே கருத வேண்டியது இருக்கும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

குன்னூரில் இன்று காலை இலங்கை ராணுவத்துக்கான பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் வைகோ ஆற்றிய முழு உரை:

கொலைவாளினை எடடா
மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
உயர் குணமேவிய தமிழா

என்ற பாவேந்தரின் பாட்டு வரிகளை, மான உணர்வு உள்ள தமிழர்கள் தம் நெஞ்சில் ஏந்தி, தமிழ்க்குலப் பகைவர்களை இனி இந்த மண்ணில் அனுமதிக்க மாட்டோம்; கேடு கெட்ட மத்திய அரசை எச்சரிக்கின்றோம் என்கின்ற வகையில், பல்லாயிரக்கணக்கில் குன்னூரில் திரண்டு இருக்கின்றீர்கள். கோவையில், மேட்டுப்பாளையத்தில், குன்னூரில், கூடலூரில் என இந்த நீலகிரிப் பகுதி முழுவதுமே பலத்த மழை பெய்து கொண்டு இருக்கின்றது. அதற்கு நடுவிலும், கொலைகாரச் சிங்களவர்கள் நேற்று வெளியேற்றப்பட்டு விட்டார்கள்; எனவே, அறிவிக்கப்பட்ட போராட்டம் நிறுத்தப்பட்டு விட்டது என்ற செய்திக்குப் பின்னரும், உணர்ச்சிப் பெருக்கோடு இங்கே திரண்டு இருக்கின்ற உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Vaiko warns centre over training to Sri Lanka

வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரி, எங்கள் மண்ணில், இந்த நீலமலையில் இருக்கின்றது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என எங்கள் முன்னோர்கள் பகுத்த, இயற்கை எழில் கொஞ்சுகின்ற இந்தக் குறிஞ்சிப் பகுதியில் இருக்கின்றது. பத்து மாதங்கள் பயிற்சிக்காக இங்கே வரவழைக்கப்பட்ட சிங்களவர்கள், விங் கமாண்டர் பண்டார தசநாயக, மேஜர் ஹரிசந்திரா ஆகிய இருவரும், 29 நாள்கள் பயிற்சிக்குப் பின்னர், நேற்றைய தினம் பிற்பகலில்தான் இங்கே இருந்து திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றார்கள்.

இந்தக் கல்லூரி இருக்கின்ற தமிழ்நாடு, இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதிதான். எங்கள் குலக் கொடிகளைக் கொன்றவர்களை, பச்சிளம் குழந்தைகளைப் படுகொலை செய்தவர்களை, அந்தச் சிங்கள இராணுவத்தில் இடம் பெற்று இருக்கின்றவர்களை, ஈழத் தமிழ் இனத்தைக் கூண்டோடு கரு அறுக்கத் திட்டமிட்ட கொடியவன் இராஜபக்சே நடத்திய இனப்படுகொலையில், கூட்டுக் குற்றவாளியாக இருக்கின்ற இந்திய அரசு, தமிழகத்துக்கு அழைத்து வந்து பயிற்சி கொடுப்பதை, இவ்வளவு காலம் எதிர்த்ததை, கண்டனம் தெரிவித்ததை, முற்றுகைப் போராட்டங்கள் நடத்தியதை, துச்சமாகக் கருதி இந்தப் பயிற்சியை நீ தொடர்ந்தாய். மே 27 ஆம் தேதி, அந்தச் சிங்கள இராணுவ அதிகாரிகள் இங்கே அழைத்து வரப்பட்டார்கள். அந்தச் செய்தி, இந்த மாதம் 9 ஆம் தேதி வரையிலும் வெளியில் தெரியாமல் ரகசியமாகத்தான் இருந்தது.

முதல்வர் கடிதம்

தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள், இந்தியப் பிரதமருக்கு ஒரு கடுமையான கடிதம் எழுதினார். அதில், தமிழர்கள் நெஞ்சம் நெருப்பாக எரிகிறது; ஈழத்தமிழர்கள் படுகொலையால் அவர்கள் இதயம் துடிக்கின்றது; இதற்குக் காரணமான சிங்கள இராணுவத்தினரை, இந்தியாவுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து பயிற்சி கொடுப்பது அக்கிரமம் அல்லவா? அவர்களை உடனே வெளியேற்றுங்கள்' என்று கேட்டுக் கொண்டார்.

தோழர்களே, நான் எந்த அரசியல் நோக்கமும் இன்றிப் பேசுகிறேன். தமிழக முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே டெல்லியில் செய்தியாளர்களிடம் ஏளனமாகப் பேசியபோது, நாடாளுமன்றத்தில் அதைக் கண்டித்தவன் நான். அதே பார்வையோடுதான் இப்போதும் பேசுகிறேன். ஏழரைக் கோடி மக்கள் வாழ்கின்ற எங்கள் தாயகமாம் தமிழகத்தின் முதல் அமைச்சர், கொலைகாரச் சிங்களவர்களுக்குப் பயிற்சி கொடுக்காதே என்று கூறியதற்குப் பிறகும், தொடர்ந்து தமிழ்நாட்டில் பயிற்சி கொடுக்க உனக்கு என்ன துணிச்சல்? என்ன செய்ய முடியும்? என்ற ஏளனமா? சுயமரியாதையை இழந்து விட்ட சில கைக்கூலிகள், இந்தியா பயிற்சி கொடுக்காவிட்டால், அவர்களுக்குச் சீனா பயிற்சி கொடுக்கும் என்கிறார்கள்.

ஒருபோதும் அஞ்சப் போவதில்லை

இந்திய இராணுவத்தின் பயிற்சிக் கல்லூரியை முற்றுகை இடுவதாக நாங்கள் அறிவித்தோம். தொடர்ந்து போராட்டங்களை நடத்தியதற்குப் பிறகு, 29 நாள்கள் கழித்து அவர்களைத் திருப்பி அனுப்பி இருக்கின்றாய்; அடுத்து மேலும் ஏழு சிங்கள இராணுவத்தினரை இங்கே பயிற்சிக்கு அழைத்து வருவதற்கு நீ திட்டம் வகுத்து இருக்கின்றாய். வெலிங்டனில் உள்ள இராணுவத்தினருள், தாய்த் தமிழகத்தின் மான உணர்வு உள்ள தமிழ் இளைஞர்களும் இருக்கின்றார்கள். எங்களுடைய இந்த உரைகள், அவர்களுடைய செவிகளுக்குப் போய்ச் சேரும். இந்திய அரசுக்குச் சொல்லுகிறேன்: உன்னுடைய எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சுகிறவர்கள் எவரும் இங்கே இல்லை. கோவை இராமகிருட்டிணன் ஆகட்டும், கொளத்தூர் மணி ஆகட்டும், நாங்கள் எல்லாம் பல ஆண்டுகள் சிறையில் அடைபட்டுக் கிடந்தவர்கள். அறிவாசான் தந்தை பெரியாரின் கருஞ்சட்டைப் பெரும்படையின் வீரர்கள் நாங்கள். மிசா சட்டம், தேசப் பாதுகாப்புச் சட்டம், தடா சட்டம், பொடா சட்டம் என உன்னுடைய அடக்குமுறைச் சட்டங்கள் அனைத்தையும் பார்த்தவர்கள் நாங்கள்.

இந்திய ராணுவத் தமிழர்கள் பொறுக்கமாட்டார்கள்

இந்த வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரி இருக்கின்ற இடம், எங்கள் மண். இங்கே கொண்டு வந்து, சிங்களவர்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றாய். 1,37,000 பேர்களைக் கொன்று குவித்த சிங்கள இராணுவத்துக்காரன், தமிழர்களின் இரத்தகறை படிந்த கரங்களோடு, இந்தத் தமிழ மண்ணுக்கு வந்து பயிற்சி பெறுவதா? உன்னுடைய இராணுவத்தில் இருக்கின்ற எங்கள் இளைஞர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் கசப்பு அடைய எவ்வளவு நேரம் ஆகும்? நான் இப்படிப் பேசினால், இந்திய இராணுவத்தை எதிர்த்துப் பேசிவிட்டான் என்று உடனே என்னைக் கூண்டில் அடைக்க அவர்கள் முற்படுவார்கள். அதற்காக, அவர்கள் இந்த உரையைப் பதிவு செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

குற்றேவல் புரிகிற கல்லூரியா?

இது, 2013 ஜூன் 25. 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள், நெருக்கடி நிலைக் காலத்தின்போது, டெல்லி ராம்லீலா மைதானத்தில் உரை ஆற்றிய ஜெயப்பிரகாஷ் நாராயண் சொன்னார்: இராணுவத்தில் இருக்கின்றவர்களே, எதேச்சாதிகாரச் சட்டத்துக்கு உடன்படாதீர்கள்; அந்த உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாதீர்கள்; செயல்படாதீர்கள்; அவர்கள் ஏவுகின்ற இடங்களுக்குத் துப்பாக்கிகளோடு செல்லாதீர்கள்; இராணுவத்தின் கட்டளைகளை ஏற்காதீர்கள் என்று அறைகூவல் விடுத்தார். அன்று இரவிலேயே கைது செய்யப்பட்டார். அதுபோல, எங்கள் மக்களைக் கொன்று குவித்த கொடியவர்களை, இந்தத் தமிழ் மண்ணுக்கே அழைத்து வந்து பயிற்சி கொடுக்கின்றார்களே, போது, நாட்டைக் காக்கப் போராடுகின்ற என் அருமைச் சகோதரர்களே, உங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டால் நீங்கள் துடிக்க மாட்டீர்களா? இது இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியா? அல்லது கொலைகாரன் இராஜபக்சேவுக்குக்

குற்றேவல் புரிகின்ற பயிற்சிக் கல்லூரியா? அல்லது, சிங்களவனின் இராணுவப் பயிற்சிக் கல்லூரியா?

துப்பாக்கிக்கு மார்பு காட்டிய தமிழர்கள்

எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும். இந்தக் குன்னூரில் இருக்கின்ற பொதுமக்களைக் கேட்கின்றேன். இந்தியாவில் வேறு எந்த மாநில மக்களில் ஒரு பத்துப் பேரைப் படுகொலை செய்து விட்டு, அப்படிக் கொலை செய்த நாட்டுக்காரன் அந்த மாநிலத்துக்கு உள்ளே நுழைய முடியுமா? வங்காளி அனுமதிப்பாரா? மராட்டியர்கள் பொறுத்துக் கொள்வார்களா? மலையாளிகள் சகித்துக் கொள்வார்களா? பஞ்சாபியர்கள் தாங்கிக் கொள்வார்களா? இது நியாயமா?

நாம் மட்டும் மானம் அழிந்து போய்விட்டோமா? இது முத்துக்குமார்கள் பிறந்த மண். 1965 ஆம் ஆண்டிலேயே இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு மார்பு காட்டிய மாவீரர்கள் உலவிய மண் இது. அவர்களைச் சுட்டுக் கொன்று, அவர்களது உடல்களை அருகில் உள்ள மதுக்கரைக் காடுகளில்தான் கொத்துக் கொத்தாகப் போட்டுப் புதைத்தார்கள். தமிழனுக்கு மட்டும் அநீதியா? வங்கதேசத்தை அமைப்பதற்காக, இந்திய இராணுவத்தை அனுப்பினீர்களே, உங்களுக்கு அங்கே என்ன வேலை என்று நாங்கள் கேட்க மாட்டோமா? மனித உரிமைகளைக் காக்க, மனிதாபிமானத்தின் அடிப்படையில் நாங்கள் படையை அனுப்புகிறோம் என்றாரே அம்மையார் இந்திரா காந்தி? அது உள்நாட்டுப் பிரச்சினை அல்ல பன்னாட்டு மனித உரிமைப் பிரச்சினை என்றாரே? அன்றைக்கு இந்தியப் படைகளுக்குத் தலைமை தாங்கினாரே ஷாம் மனேக்ஷா, அவர் இந்த வெலிங்டன் மண்ணை நேசித்தவர். அன்றைக்கு வங்கதேசத்தை உருவாக்கிக் கொடுத்தீர்கள்.

இந்திய இராணுவத்துக்காக எத்தனையோ தமிழர்கள் இரத்தம் சிந்தி இருக்கின்றார்கள். சீறி வந்த குண்டுகளை மார்பில் தாங்கி மடிந்து, கார்கில் போர்முனையில் திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவனே, எங்கள் காவிரி ஆற்றங்கரையில் பிறந்த மேஜர் சரவணன். தனிநாடு கேட்ட அண்ணா, சீனம் படையெடுத்த போது, வீட்டுக்கு ஒரு பிள்ளை இராணுவத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளச் சித்தமாகட்டும் என்று, வேலூர் சிறையில் இருந்தவாறு எழுதினார்: அள்ளி வழங்குங்கள் நிதியை என்று அறிவித்தார். மதுரை முத்து தந்த தங்க வாளை, பாதுகாப்பு நிதிக்காகக் கொடுத்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எத்தனைத் தமிழர்கள் உயிர் ஈந்தனர்? இந்த மண்ணில் பிறந்த இஸ்லாமிய இளைஞர்கள்,பாகிஸ்தானுக்கு எதிரான போரில் உயிர் கொடுத்தார்கள்.

திணிக்கப்பட்ட ஒருமைப்பாடு

திணிக்கப்பட்ட ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, நாட்டுக்காகப் போராடி இருக்கின்றார்கள். இந்த வேளையில், உத்தரகாண்டில், கேதார்நாத் பள்ளத்தாக்கில், இன்னமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றார்கள். அங்கும் எங்கள் தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், தங்கள் உயிர்களைத் துச்சமாகக் கருதி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். ஆனால், கொள்ளிக்கட்டையைக் கொண்டு வந்து எங்கள் நெஞ்சில் திணிப்பதைப் போல, சிங்களவர்களைக் கொண்டு வந்து இங்கே பயிற்சி கொடுக்கின்றாய். இந்திய இராணுவத்தை ஒன்றும் நாங்கள் வெறுக்கவில்லை. எங்கள் மக்களைக் கொன்றவனுக்குப் பயிற்சி கொடுப்பதைத்தான் எதிர்க்கின்றோம். கூட்டுக் குற்றவாளி இந்தியா அவனை இங்கே அழைத்து வருவதற்கு என்ன காரணம்? அந்தப் படுகொலைகளுக்கு இந்திய அரசும் உடந்தையான கூட்டுக் குற்றவாளி. அதுதான் காரணம். இவர்கள்தாம் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தார்கள்; ஆயிரம் கோடிப் பணம் கொடுத்தார்கள்; கொத்துக்குண்டுகளை வீசுவதற்கு உடந்தையாக இருந்தார்கள்; உலகம் தடை செய்த ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். இந்திய இராணுவ அதிகாரிகளை அனுப்பி போரை இயக்கினார்கள்.

இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்ற கொலைகாரனை, காமன்வெல்த் போட்டிகளுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்துக் கொண்டு வந்து விருந்து வைத்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்த நேரத்தில் அவனை இங்கே அழைத்து வந்து பரிவட்டம் கட்டினாய். அவனை இங்கே அழைத்து வராதே என்றோம். அதையும் மீறி அழைத்து வந்தாய். 1200 தோழர்களோடு, மத்தியப் பிரதேச மாநிலத்தில், விந்திய சாத்புரா மலைச் சரிவுகளிலே வந்து போராட்டம் நடத்தினோம். அதற்குப் பிறகும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு வந்தாய். திருப்பதி எங்கள் தமிழகத்தின் பூர்வீக மண். இந்தியாவுக்கு உள்ளே அவன் எங்கே வந்தாலும், டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகை இடுவோம் என்று அறிவித்து முற்றுகை இட்டோம். டெல்லிக்கு வராமல் கட்டாக் வழியாக பீகாருக்கும், திருப்பதிக்கும் அழைத்துக் கொண்டு போனாய்.

யார் இந்த வெலிங்டன்?

இந்த ஊரின் பெயராக உள்ளதே வெலிங்டன், அவன் ஒரு பெரிய தளபதி. அயர்லாந்திலே பிறந்தவன். 1787 இல் இங்கி 1796 இல் இந்தியாவுக்கு வந்தான். 1803 ஆம் ஆண்டு மராத்தியர்களுக்கு எதிரான போரில் இங்கிலாந்துக்கு வெற்றி தேடிக் கொடுத்ததால், ஃபீல்டு மார்ஷல் ஆக்கப்பட்டவன். 1815 இல், வாட்டர்லூ போரில், உலகம் போற்றும் மாவீரர்களுள் ஒருவனாகிய நெப்போலியனின் படைகளைத் தோற்கடித்தவன். படைக்கலப் பிரிவுக்குத் தலைவன் ஆனான். 1828 இல், இங்கிலாந்தின் பிரதமராகவே ஆக்கப்பட்டான். அவனது சீர்திருத்தச் சட்டங்களை மக்கள் ஏற்காததால், அவன் பதவியில் இருந்து விலகிச் செல்ல நேரிட்டது. அவன் பெயரால் அமைக்கப்பட்டதுதான், இந்த வெலிங்டன் கல்லூரி. இங்கே கொண்டு வந்து பயிற்சி கொடுக்கின்றாயே, உனக்கு மன்னிப்பே கிடையாது. இங்கே மட்டும் அல்ல, இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் சிங்களவனுக்குப் பயிற்சி கொடுக்காதே. அப்படி நீ கொடுத்தால், இந்தியா எங்களுக்கு அந்நிய நாடு என்று நாங்கள் கருத வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தக் கொடுமை தொடரும் என்றால், எங்கள் வருங்காலத் தலைமுறை பொறுத்துக் கொள்ளாது. இதே நிலைமை நீடித்தால், இந்திய இராணுவத்துக்கு வெலிங்டனில் பயிற்சிக் கல்லூரி இருக்கக்கூடாது என்ற வகையில் எங்கள் போராட்டம் அமையும். எங்கள் வாழ்வாதாரங்களை முடக்கினால், எங்கள் குலக்கொடிகளைக் கொன்ற கொடியவனுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்தால், அவர்களுக்கு இன்பச் சுற்றுலா ஏற்பாடு செய்கின்ற கொடுமை நீடித்தால், வருங்காலத் தமிழக வாலிபர் உலகம் பொறுத்துக் கொள்ளாது. வினையை

கச்சத்தீவு

அரசியலைக் கடந்து நாங்கள் பேசுகின்றோம். அறவழியில்தான் போராடுகின்றோம். திருப்பி அனுப்பி விட்டார்கள் என்பதற்காக நாங்கள் மன்னித்து விட மாட்டோம். இந்திய அரசை மன்னிக்க மாட்டோம்.இந்திய இலங்கை உடன்படிக்கை என்றார்கள். அவன் இப்போது, இலங்கை அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை நீக்கப் போகிறானாம். இவர்கள் வாய்மூடிக் கிடக்கின்றார்கள். அவன் செருப்பால் அடித்தது போலச் சொல்லுகிறான், இந்தியப் பிரதமர் ஒன்றும் இதைப்பற்றி எங்களிடம் பேசவில்லை என்கிறான். இந்திய அரசைத் துச்சமாகக் கருதுகிறான். 563 தமிழக மீனவர்களைக் கொன்று விட்டான். சிங்களப் போர்க்கப்பல்களைக் கொண்டு வந்து கச்சத்தீவுக்கு அருகில் நிறுத்தி இருக்கின்றான்.

இன்றைக்கு அங்கே சீனர்கள் உலவுகிறார்கள், மீன்பிடிக்கின்றார்கள். சீனக் கடற்படை வீரர்கள் ரோந்து வருகின்றார்கள். இதனால், தாய்த் தமிழகத்துக்குத்தான் ஆபத்து. விடுதலைப்புலிகள் வலுவாக இருந்ததால், தமிழகத்துக்கும் பாதுகாப்பு அரணாக இருந்தார்கள். அவர்களை வலு இழக்கச் செய்ததன் மூலம், பேராபத்தைக் கொண்டு வந்து விட்டார்கள். அது நம் தலையில்தான் விடியும். ஆகவே, தமிழகத்தின் நலன்களைக் காக்க, நாம் மிக விழிப்போடு இருக்க வேண்டும். தமிழனைக் கொன்ற கொலைகாரனுக்குத் தமிழகத்தில் பயிற்சி என்றால், உலகம் நம்மைம் பற்றி என்ன நினைக்கும்? தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அறவழியில் பாடம் கற்பியுங்கள். அவர்களை, வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியுங்கள். காங்கிரஸ் கட்சியையும், அதன் பங்காளிகளையும் தூக்கி எறியுங்கள். இந்திய அரசுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களவனை வெளியேற்ற வேண்டும். அதற்காகத் தாய்த் தமிழகம் கொந்தளித்து எழுந்தது என்றால்தான், அகிலம் அதைக் கவனிக்கும். அந்தக் கடமை நமக்கு இருக்கின்றது. அதை நிறைவேற்றுவோம். தமிழகத்தின் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளத்தில் கொதித்து எழுந்து இருக்கின்ற உணர்வு மறையாது. தமிழ் ஈழம் மலரும். அது வரலாற்றுக் கட்டாயம்! என்றார் வைகோ.

இக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை. ராமகிருட்டிணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+