பல்லாவரம் பள்ளி வேன் விபத்து; மாணவன் பலி- செல்போன் பேசியபடி ஓட்டிய டிரைவர் தப்பி ஓட்டம்!
சென்னை: சென்னையில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவன் உயிரிழந்தான், 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கு காரணம் வேன் டிரைவர் செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியதுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
சென்னை பல்லாவரத்தில் தனியாருக்கு சொந்தமான வேன் ஒன்று பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றது. பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் தீபக் என்ற 9ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான், 6 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வேன் டிரைவர் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டியதே விபத்துக் காரணம் என்று தெரியவந்துள்ளது. விபத்து நடந்த உடன் வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் 7 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினார். அந்தச் சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் சென்னையில் ஒரு விபத்து நடந்துள்ளது.
பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு சரியான போக்குவரத்து வசதியும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நல்ல முறையில் இயங்குகின்றனவா? என்று அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications