ஸ்பெக்ட்ரம் வழக்கு: தயாளு அம்மாள் மனுவை விசாரிக்க டெல்லி ஹைகோர்ட் மறுப்பு!

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கலைஞர் டிவி ஆதாயம் அடைந்ததாக தொடரப்பட்ட வழக்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் முக்கிய சாட்சியமாக கலைஞர் டிவியின் பங்குதாரராக உள்ள தயாளு அம்மாள் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால் தமக்கு அல்சைமர் எனும் மறதி நோய் இருப்பதாலும் உடல்நலக் குறைவு இருப்பதாலும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி வீணா பீர்பால், தயாளு அம்மாளின் மனு, விசாரணையை முடக்கும் நோக்கம் கொண்டது. அவர் டெல்லி வந்தால்தான் உடல்நிலை பற்றி முடிவெடுக்க முடியும் என்று கூறி விசாரணையை நேற்று ஒத்திவைத்தார். ஆனால் நேற்றைய விசாரணையின் போது திடீரென தனிப்பட்ட காரணங்களால் தம்மால் தயாளு அம்மாளின் மனுவை விசாரிக்க முடியாது என்றும் இன்று வேறொரு பெஞ்ச் இதை விசாரிக்கும் என்று கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து தயாளு அம்மாளின் மனு இன்று நீதிபதி கவுர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கவுர், ஸ்பெக்ட்ரம் வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தவிர வேறு எந்த ஒரு நீதிமன்றமும் எந்த ஒரு தலையீடும் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. இதனால் இந்த வழக்கை விசாரிக்கவும் முடியாது.. இந்த மனு மீது எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.
பின்னர் வேண்டுமெனில் ஒரு ஆலோசனையாக, திங்கள்கிழமை பிற்பகல் வரை உச்சநீதிமன்றத்தில் தமது உடல்நிலை பற்றிய விவரத்தை தயாளு அம்மாள் முறையீடு செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்தனர். அதாவது சிபிஐ நீதிமன்றம், ஆஜராகததால் பிடிவாரண்ட் பிறப்பிப்பதை தவிர்க்க ஒரு ஆலோசனையாகவே இந்த அனுமதி என்றும் நீதிபதி கவுர் கூறினார். இதை தயாளு அம்மாள் வழக்கறிஞரும் ஏற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications