மத்திய அரசு விடுவித்த கொஞ்ச நேரத்தில் காடுவெட்டி குரு மீண்டும் தே.பா. சட்டத்தில் கைது

மாமல்லபுரத்தில் ஏப்ரல் மாதம் நடந்த வன்னியர் சங்க பெருவிழாவின் போது மரக்காணத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்துக்கு நீதி கோரி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு, அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் காடுவெட்டி குரு உள்ளிட்ட ஏராளமான பாமகவினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் காடுவெட்டி குரு உள்ளிட்ட 20 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள 2 வழக்குகளில் ஜாமீன் கிடைத்தால் குரு விடுதலையாவார் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் திடீரென நேற்று இரவு மீண்டும் குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்ரசேனன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் மூலம் புழல் சிறைத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டது. இதனால் காடுவெட்டி குரு தொடர்ந்தும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காடுவெட்டி குருவை மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications