இளவரசன் உடலைப் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம்- உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்!

இளவரசனின் உடல் வைக்கப்பட்டுள்ள தர்மபுரி அரசு மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதனால், மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இதை எதிர்த்து, சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கஞர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைக் கண்டித்து, இளவரசனின் பெற்றோர் தங்களது சொந்த ஊரான நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியில் 150க்கும் மேற்பட்டோருடன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 15 பேரையும் விடுவித்தால் மட்டுமே இளவரசனின் உடலை பெற்றுக் கொள்வோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் இன்று ஜாமீனில் விடுவித்தது. இதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள இளவரசனின் பெற்றோர், இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனை முடிந்ததும் பெற்றுக்கொள்ளவும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் இளவரசனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள விரும்புவர்கள் பங்கேற்க ஏதுவாக தர்மபுரியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இளவரசன் உடலை இன்று எய்ம்ஸ் மருத்துவர் குழு மறு பிரேத பரிசோதனை செய்கிறது. பரிசோதனை முடிந்த பிறகு உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications