பொற்கோவில் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ராணுவ அதிகாரி மீதான தாக்குதல்.. லண்டனில் விசராணை தொடங்கியது
லண்டன்: அமிர்தசரஸ் பொற்கோவிலில் மறைந்த இந்திரா காந்தி காலத்தில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் லண்டன் கோர்ட்டில் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த வழக்கில் இரண்டு சீக்கிய ஆண்கள் மற்றும் ஒரு பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
9 மாதங்களுக்கு முன்பு பிரார் மீது லண்டனில் தாக்குதல் நடந்தது. அவர் கத்தியால் குத்தப்பட்டார். பிரார், ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய ராணுவ அதிகாரி ஆவார்.
இந்த தாக்குதல் தொடர்பாக 34 வயதான மந்தீப் சிங் சந்து, 36 வயதான தில்பக் சிங் மற்றும் 38 வயதுப் பெண் ஹர்ஜித் கெளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது லண்டன் செளத்வாக் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணை நான்கு வாரத்திற்கு நீடிக்கும்.
இந்த வழக்கில் 33 வயதான பர்ஜிந்தர் சிங் சங்கா என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளார். அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தனது மனைவி மீனாவுடன் லண்டனுக்கு தனிப்பட்ட பயணமாக வந்திருந்த நேரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கப்பட்டார் பிரார் என்பது நினைவிருக்கலாம்.
78 வயதான பிராருக்கு தீவிர கத்திக்குத்துக் காயம் ஏற்பட்டது. அவரது மீனா அதிர்ஷ்டவசமாக தாக்குதலிலிருந்து தப்பினார். தற்போது நாடு திரும்பி விட்ட பிரார், இந்தியாவிலிருந்தபடி கோர்ட் விசாரணையின்போது தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications