தொலைத்தொடர்பு, ராணுவத் தளவாட உற்பத்தி துறைகளில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடு: திமுக கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

Karunanidhi opposes move to increase cap on FDI
சென்னை: இந்திய பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரகசியங்களுக்கு மிகவும் இன்றியமையாத துறைகளான தொலைத் தொடர்பு, ராணுவத் தளவாட உற்பத்தி ஆகிய இரண்டு துறைகளிலுமே அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கூடுதலாக அனுமதி அளித்திருப்பதை முழுமையாக எதிர்ப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

லட்சக்கணக்கான சில்லரை வணிகர்களையும், நுகர்வோர் என்ற நிலையில் இருந்து பொருள்களை வாங்கிப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான சாதாரண ஏழையெளிய நடுத்தர மக்களையும் ஒரே நேரத்தில் பாதிக்கும் சில்லரை வணிகத்தில் அன்னிய நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டை அனுமதிப்பது ஆபத்து என்பதால் இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய அரசை நான் கேட்டுக் கொண்டேன்.

சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலே நேரடி அன்னிய முதலீடுகளை 100 சதவிகித அளவிற்கு அதிகரிக்க வழி வகுத்த மத்திய அரசு, தற்போது இந்திய பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரகசியங்களுக்கு மிகவும் இன்றியமையாத துறைகளான தொலைத் தொடர்பு, ராணுவத் தளவாட உற்பத்தி ஆகிய இரண்டு துறைகளிலுமே அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கூடுதலாக அனுமதி அளித்திருக்கிறது. பிரதமர் தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புத் துறையில் தற்போதுள்ள 74 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு, 100 சதவிகிதமாக உயர்த்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதில் 49 சதவிகித அளவிலான முதலீட்டை அரசின் முன் ஒப்புதல் இல்லாமலே நிறுவனங்கள் பெறலாம்.

பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தற்போதுள்ள 26 சதவிகித உச்சவரம்பு தொடரும் என்றாலும், நவீனமயமான தயாரிப்புத் திட்டங்கள் தொடர்பாக ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனியாக பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்கும். காப்பீட்டுத் துறையில் 26 சதவிகித அளவில் நேரடி முதலீட்டு வரம்பு 49 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.விமான போக்குவரத்துத் துறையில் தற்போதுள்ள 49 சதவிகித உச்சவரம்பு அப்படியே தொடருகிறது. கட்டுமானக் கம்பெனிகளின் எப்.டி.ஐ. முதலீடு 49 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாக அதிகரிக்கப்படுகிறது. ஒரே ‘‘பிராண்டை'' சேர்ந்த பொருள்களின் சில்லரை வர்த்தகத்தில் தற்போது உள்ள 49 சதவிகித அன்னிய நேரடி முதலீடு 100 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 12 துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டிற்கான வரம்பை உயர்த்திட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தொலைத் தொடர்புத் துறையில் இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்த 74 சதவிகித அன்னிய நேரடி முதலீடு, இனி 100 சதவிகிதம் என உயர்ந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்கி வந்த சில பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள், இனிமேல் தாங்களாகவே முழு முதலீட்டோடு நடத்தும். அவர்களுக்கு இந்திய நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவையில்லை என்ற நிலை ஏற்படும். வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதரவோடு இயங்கி வந்த இந்திய நிறுவனங்களும் தனித்துப் போட்டியிட முடியாமல் தவிக்க நேரிடும். ஓரளவு முதலீட்டோடு இயங்கி வந்த இந்திய நிறுவனங்களின் கதி, நிர்க்கதியாக முடியும். பல லட்சம் ஊழியர்களின் நலனும் நட்டாற்றில் கைவிட்டதைப் போலாகி விடும்.

தொலைத் தொடர்புத் துறையில் வெளி நாட்டு நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும் இணைந்து கூட்டாக நடத்தி வருகின்ற நிறுவனங்கள் எல்லாம் தற்போது லாபம் அடைகின்றன. இந்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தணிக்கை நிறைவு பெறாத கணக்கைப் பார்த்தால், 2008-2009-ஆம் ஆண்டில் 525 கோடி ரூபாய் லாபம் என்பதற்கு மாறாக, 2009-2010-ஆம் ஆண்டு நஷ்டம் 1,823 கோடி ரூபாய், 2010-2011-ஆம் ஆண்டு நஷ்டம் 6,384 கோடி ரூபாய், 2011-2012-ஆம் ஆண்டு நஷ்டம் 8,851 கோடி ரூபாய், 2012-2013-ஆம் ஆண்டு நஷ்டம் 8,198 கோடி ரூபாய் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நமது மத்திய அரசு, வெளிநாட்டு நிறுவனங்கள் மேலும் அதிக அளவில் லாபம் அடைவதற்குத் தேவையான வழிகளைத் திறந்துவிட்டிருக்கிறது. இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவிகிதமாக அதிகரிக்கும் முடிவினை எதிர்த்து அந்தத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவிருக்கின்ற நிலையில், இதுபோன்ற மிகக் கடுமையான முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமா என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டும். மத்திய அரசின் இந்த முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். குறிப்பாக நாட்டின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையை வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல வழி வகுக்கும். அன்னிய நேரடி முதலீட்டினை இவ்வாறு பல்வேறு முக்கிய துறைகளில் உயர்த்துகின்ற மத்திய அரசின் முடிவுகளைத் திமுக முழுவதுமாக எதிர்க்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+