பண்ணை பசுமை காய்கறிகடை: 6 லட்சம் கிலோ காய்கறி… ரூ.1.61 கோடி ரூபாய் விற்று சாதனை
சென்னை: சென்னையில் பண்ணை பசுமை காய்கறி கடைகள் தொடங்கி ஒரு மாதத்தில் ரூ.1.5 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணை முட்டும் காய்கறி விலை ஏற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்த விலையேற்றத்தை தடுக்கும் வகையில், சென்னையில் 29 இடங்களில் பண்ணை பசுமை காய்கறிகள் விற்பனை திட்டத்தை கடந்த மாதம் 20 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், இந்த திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பண்ணை பசுமை காய்கறி கடைகளில் விற்பனை அதிகரித்து வருகிறது.

பசுமையாக கிடைக்கிறதே
இங்கு காலையில் 7 மணிக்கு தொடங்கும் வியாபாரம் 11 மணிக்குள்ளாக விற்பனையாகிவிடுகிறது. காரணம் பச்சைப் பசேல் என்று புத்தம் புதிதாக காய்கறிகள் கிடைக்கிறது என்கின்றனர் நுகர்வோர்கள்.

விலை மலிவுதான்
தனியார் கடைகளில் கிடைக்கும் காய்கறிகளை விலை பாதிக்குப் பாதி விலை மலிவாக இருக்கிறது என்பதால் இதனைத் தேடி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஒரு மாதத்தில் ரூ.1.5 கோடிக்கு மேல்
ஜூன் 20 ம் தேதி தொடங்கி ஜூலை 22ம் தேதி வரை இந்த மலிவு விலை காய்கறிகடையில் ஒரு கோடியே 61, லட்சத்து 93 ஆயிரத்து 442 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

6லட்சம் கிலோ காய்கறி
பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் கடந்த ஒரு மாதத்தில் 6 லட்சம் கிலோ காய்கறிகள் (602 டன்) விற்பனையாகி இருக்கிறது.

வெளிமார்க்கெட்டில்
பண்ணை பசுமை காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்கப்படுவதை தொடர்ந்து மக்களை கவர வெளிமார்க்கெட்டுகளிலும் காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர் கடைக்காரர்கள். இதன் மூலம் அரசு நினைத்ததை சாதித்துவிட்டது என்கின்றனர் நுகர்வோர்கள்.

பழங்கள் விற்கப்படுமா?
காய்கறிகளைப் போல பழங்களையும் மலிவு விலையில் விற்பனை செய்யவேண்டும் என்பது நுகர்வோர்களின் கோரிக்கை. சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற மலிவு விலை காய்கறி கடைகள் திறக்கப்படுவதன் மூலம் காய்கறிகளின் விலை கட்டுக்குள் வரும் என்கின்றனர் பொதுமக்கள்.












Click it and Unblock the Notifications