ஸ்பென்சர் பிளாசாவில் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து வாலிபர்... தற்கொலை
சென்னை: சென்னை ஸ்பென்சர் பிளாசா 3 வது மாடியில் இருந்து கீழே குதித்த வாலிபர் சில மணிநேர சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டை சேர்ந்தவர் கிஷோர்குமார் (வயது 27). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், காலை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவிற்கு அவர் வந்தார். அங்கேயே சுற்றிக் கொண்டிருந்த அவர் திடீரென 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
வாலிபர் ஒருவர் கீழே விழுவதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அந்த இடத்திற்கு ஓடி வந்தனர். தலையில் அடிபட்டு கால் உடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிஷோர்குமார் குறித்து, அங்குள்ள தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக கிஷோர்குமாரை மீட்டு, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்தவமனைக்கு அனுப்பிவைத்தனர்
அங்கு, கிஷோர்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை அறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொண்டனர். தலையில் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
அவர் மாடியில் இருந்து கீழே குதித்ததற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் சிறிதுநேரம் உளறிக்கொண்டே இருந்தார். தொடர்ந்து, கிஷோர்குமாருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும், மாலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கிஷோர்குமாரின் தற்கொலை முடிவுக்கு காரணம் காதல் விவகாரம் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications